விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
ஏழு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் தாந்தோணிமலையை அடுத்த முத்தலாடம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த தங்கவேல்(58) கடந்த ஆண்டு மே மாதத்தில் தன் வீட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை அவரது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உத்தரவின் பேரில், கரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், தங்கவேலை கைது செய்தனர்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், நீதிபதி ஏ.நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அந்த அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, போக்சோவின்கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, மேலும் ரூ. 1,000 அபராதம், அந்த அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் ரூ.1,000 அபராதம், அதைச் செலுத்தத் தவறினால் ஒராண்டு சிறைத்தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.