பயணிகள் ரயிலில் இறந்துகிடந்த முதியவர்: தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

பயணிகள் ரயிலில் இறந்துகிடந்த முதியவர்: தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் இருந்த முதியவர் திடீர் என மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து தினசரி காலை கோயம்புத்தூருக்கு பயணிகள் ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம்போல் இன்று காலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது. அப்போது அந்த ரயிலில் இருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதுகுறித்து சகபயணிகள் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துபார்த்தபோதுதான் முதியவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், “இறந்தவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன்(72) என்பது தெரியவந்தது. நடராஜன் சுவாமிதோப்பில் இருக்கும் அய்யா வைகுண்ட சாமிகளின் தலைமைப்பதிக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி ஊருக்குச் செல்ல பயணம் செய்திருக்கிறார். ஆனால் வயோதிகத்தால் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. நடராஜன் உயிர் இழந்தது குறித்து அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் கோயம்புத்தூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து சிறிதுநேரம் தாமதமாகக் கிளம்பியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in