தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள்: இரவில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை

தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள்: இரவில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை

வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை இறுக்கி மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் மதுரை அலங்காநல்லூர் அருகே நடந்துள்ளது. இது குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் காந்திமதி (62). முன்னாள் ராணுவ வீரரான இவரது கணவர் பாண்டி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால், காந்திமதி மட்டும் கணவரின் ஓய்வூதியத்தை வைத்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை காந்திமதி வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டினுள் சென்று பார்த்தனர். அங்கு, கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் காயத்துடன் காந்திமதி சடலமாகக் கிடந்தார். தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கை ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரிக்கப்பட்டன.

காந்திமதி தனியாக வசித்து வந்ததால் அவரது வீட்டில் எவ்வளவு நகை மற்றும் பணம் இருந்தது என்பது தெரியவில்லை. மேலும், நகை, பணம் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இக்கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், காந்தி மதியை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், அவர் தனியாக வசித்து வந்ததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள், இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து கொலை செய்துள்ளனர் என்றும், நகை, பணத்திற்காக அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in