கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

கூடுவாஞ்சேரியில் இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் துக்க நிகழ்வில் உயிரோடு திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(72).  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் தனது மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார்.  ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம்.  அந்தவகையில் நேற்று முன்தினம் காலை  வழக்கம் போல,  சிங்கப்பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவதாக வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டுக் கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. உயிரிழந்த மூதாட்டியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ரயில்வே காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த தகவல் ஊருக்கும் பரவியதும், சந்திராதான் உயிரிழந்ததாக உறவினர்கள் கருதியிருந்தனர்.

இறந்தவரின் உருவம் தனது தாய் உருவத்துடன் ஒத்துப்போனதால் உயிரிழந்தது தனது அம்மா தான் என ரயில்வே போலீஸ் நடத்திய விசாரணையில் அவரது மகன் வடிவேலுவும்  உறுதி செய்துள்ளார்.  இதனையடுத்து மூதாட்டியின் உடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்கள் சூழ தாரை தப்பட்டையுடன் முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கூடுவாஞ்சேரி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் நேற்று காலை, சந்திராவிற்கு  படையல் போடும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரயிலில் அடிபட்டு இறந்தது சந்திரா இல்லை என்பதை உறுதிப்படுத்திய உறவினர்கள், இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து ரயிலில் அடிபட்டு  உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தாம்பரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in