செல்ஃபி புகைப்படத்துடன் அனுப்பப்பட்ட மெசேஜ்... பதறி பழநி வந்த உறவினர்கள்: கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு!

உயிரிழந்த தம்பதியினர்
உயிரிழந்த தம்பதியினர்

வங்கியில் பெற்ற கடனை திரும்பச் செலுத்த முடியாததால் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் பழநியில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன்-சத்தியபாமா‌ தம்பதியினர் திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். பழநி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர், பழநி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த இருவரும் மீண்டும் தங்களது அறைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தம்பதியினர் தங்கி இருந்த விடுதியின் பகுதியில் இருந்து கேரளாவைச் சேர்ந்த சிலர் அழுதபடியே வந்துள்ளனர். இதுகுறித்து, விடுதி ஊழியர்கள் அவர்களிடம் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள சுகுமாறன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள்‌ என்றும், அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பி, தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த‌ விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். மேலும், தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தாங்கள் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும் மலையாளத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக பழநி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in