‘பாகிஸ்தான் உங்களைப் பயன்படுத்தி எங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது!’

காஷ்மீர் தொடர்பாகப் பேசிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்
‘பாகிஸ்தான் உங்களைப் பயன்படுத்தி எங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது!’

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கருத்து தெரிவித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370-வது சட்டக்கூறு 2019 ஆகஸ்ட் 5-ல் மத்திய உள் துறை அமைச்சகத்தால் நீக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் எனும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காஷ்மீர் அரசியல் தலைவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டனர். பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டையொட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் இதுகுறித்து பேசிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி), ‘ஐநா தீர்மானத்தின்படி காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்து மதவெறியைக் காட்டுவதாகவும் விமர்சித்திருந்தார்.

இந்தச் சூழலில், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இது குறித்துப் பேசியிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை எனக் குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்நிலையில், இதை மறுத்திருக்கும் இந்தியா, “இந்த அறிக்கை தவறான தகவல்களைக் கொண்டது. தேவையற்றது. நாங்கள் ஓஐசி நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணுகிறோம். ஆனால், பாகிஸ்தான் ஓஐசி தளத்தைத் தவறாகப் பயன்படுத்தி எங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதை அந்நாடுகள் தடுக்கத் தவறிவிட்டன” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in