`வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுத்தால் நிலம் தருவோம்'- என்.எல்.சிக்கு எதிராக போராடும் பொதுமக்கள்

வழியை மறித்து அமர்ந்திருக்கும் ஊர்மக்கள்
வழியை மறித்து அமர்ந்திருக்கும் ஊர்மக்கள்

தங்களிடமிருந்து நிலம் எடுத்தால் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் எடுக்க அளவீடு செய்வதற்காக  சென்ற அதிகாரிகளை  கிராம மக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.

அதிகாரிகள் பேச்சு வார்த்தை
அதிகாரிகள் பேச்சு வார்த்தை

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் இரண்டாவது சுரங்கம் விரிவாக்கம் பணிக்காக பல்வேறு கிராமங்களில் நிலம்  கையகப்படுத்தப்பட்டு  வருகிறது. அதன்படி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை ஊராட்சிக்கு உட்பட்ட கரிவெட்டி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தி அளவீடு செய்வதற்காக ஏற்கெனவே சென்றபோது கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை வழிமறித்து முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

குடும்பத்தில்  ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றிற்கு இழப்பீடாக  1 கோடி வழங்க வேண்டும், 10 சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலம்  அளவீடு செய்ய அனுமதிப்போம் என அப்போது  உறுதிபட  தெரிவித்தனர். அதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். 

இந்த நிலையில் இன்று திடீரென கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், நெய்வேலி நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று கரிவெட்டி கிராமத்திற்கு நிலம் அளவீடு செய்வதற்காக  மீண்டும் வந்தனர். இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள்  ஊருக்கு  வெளியிலேயே  திரண்டு நின்று அதிகாரிகளை மறித்ததுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

அத்துடன் அதிகாரிகளைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர். அதனையடுத்து  மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் உள்ளிட்ட  அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். ஆனால்  வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என்பதை உறுதி செய்து உத்தரவாதம் அளித்தால்தான்  நிலம் அளவீடு செய்ய அனுமதிப்போம் என பொதுமக்கள் உறுதியுடன் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் விவசாயிகள், கிராமமக்கள், என்எல்சி அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து பேசி முடிவு செய்யலாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றதும்  பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in