'நாங்கள் என்ன கள்ளச்சாராயமா காய்ச்சுகிறோம்?': தனியார் பள்ளி கூட்டமைப்பு கொந்தளிப்பு

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்'நாங்கள் என்ன கள்ளச்சாராயமா காய்ச்சுகிறோம்?': தனியார் பள்ளி கூட்டமைப்பு கொந்தளிப்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் பேசுகையில், ‘’ தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கு பல்லாயிரக்கணக்கில் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக பல்வேறு பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.

பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க பரிந்துரைக்க நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரம், மெட்ரிக் பள்ளிகளுக்கு ரூ 50 ஆயிரம். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ரூ 1.50 லட்சம் என பள்ளி நிர்வாகிகளைக் கேட்டு மிரட்டி வசூலித்து வரும் இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சென்ற மாதம் நடந்து முடிந்த தொழில் பொருள்காட்சிக்கு தனியார் பள்ளிகள் 10 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்.

புத்தகக் கண்காட்சிக்கு பணம் கொடு, தமிழரசு பத்திரிக்கைக்கு  அனைத்து பள்ளிகளும் ரூ.2000 கட்ட வேண்டும் என்று கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு போடுகிறார். பள்ளி நிர்வாகிகள் என்ன கள்ளச்சாராயமா காய்ச்சுகிறார்கள்? தயவு செய்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எமது மாநில சங்கம் நிச்சயம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிடித்துக் கொடுக்கும். பின்னர் எங்கள் மீது வருத்தப்பட வேண்டாம்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போஸ்டர் ஒட்டி போராட்டம் நடத்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்து புகார் அளிப்போம். இது வேண்டுகோள் மட்டுமல்ல. கடைசி எச்சரிக்கை’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in