சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி; அதிகாரிகள் அதிரடி ரெய்டு: நடந்தது என்ன?

மாதிரி படம்
மாதிரி படம்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி கண்டறியப்பட்டு அங்கிருந்த ஹிட்டாச்சி உள்ளிட்ட இயந்திரங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவிலான மலைப்பகுதி மற்றும் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளதால் இங்கு 150-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றில் சில குவாரிகள் கனிமவளத்துறையின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல ஆண்டு காலமாக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே நெடும்பாறையில் பல மாதங்களாக ஒரு குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து இன்று அந்த குவாரிக்கு திடீர் ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் பணிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

அங்கு பாறைகளைச் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த கற்களை வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ஹிட்டாச்சி இயந்திரம் உள்ளிட்ட மூன்று இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். நார்த்தாமலை மலைப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் இந்த மலைப்பகுதியின் அருகிலேயே பல மாத காலமாக சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வந்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட சட்டவிரோத கல்குவாரியின் அருகே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை காவல்துறையின் துப்பாக்கி சூடு பயிற்சி மையம் செயல்பட்டு வந்ததால் இங்கு பாறை எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. துப்பாக்கி சூடும் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவலர் துப்பாக்கி சூடு பயிற்சி மையம் மூடப்பட்டது. இதன் பின் இந்த கல்குவாரி மீண்டும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் இந்த கல்குவாரியால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும், இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து வெடி வைக்கப்படுவதால் அந்த பகுதி வழியே மக்கள் நடமாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

குவாரிக்கு வந்து ஆய்வு செய்த குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் கூறுகையில்," சட்ட விரோதமாக கல்குவாரி நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது கல்குவாரியில் கல்வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ஹிட்டாச்சி வாகனங்கள் ஒரு டோசர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இனிமேல் சம்பந்தப்பட்ட இடத்தில் கல்குவாரி நடக்காமல் இருக்க வருவாய் துறை சார்பில் அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தூர் தாலுகா உட்பட்ட எந்த ஒரு இடத்திலும் சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் வட்டாட்சியர் சக்திவேல் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in