இயற்கைச் சீற்றங்களைவிடவும் அதிக உயிரிழப்புகள்: பாம்புக் கடி பாதிப்பைக் குறைப்பதில் ஒடிசா தீவிரம்!

இயற்கைச் சீற்றங்களைவிடவும் அதிக உயிரிழப்புகள்: பாம்புக் கடி பாதிப்பைக் குறைப்பதில் ஒடிசா தீவிரம்!

புயல், கனமழை போன்ற பாதிப்புகளுக்குப் பெயர்பெற்ற ஒடிசா மாநிலத்தில், இயற்கைச் சீற்றங்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிடவும் பாம்பு கடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். 2015-16 முதல் கடந்த 7 ஆண்டுகளில் 5,964 பேர் பாம்பு கடித்ததால் உயிரிழந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் 800-க்கும் மேற்பட்டவர்களின் பாம்பின் தீண்டலுக்குப் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே பாம்புக் கடியால் அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது ஒடிசா. பாம்புக் கடியானது மாநில அளவிலான பேரழிவு என 2015-ல் ஒடிசா அரசு அறிவித்தது. இந்தியாவிலேயே அப்படியான அறிவிப்பை வெளியிட்ட முதல் மாநிலம் ஒடிசாதான்.

2015-16-ல் 520 பேர் பாம்புக் கடியால் உயிரிழந்த நிலையில், 2020-21-ல் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,107 ஆக அதிகரித்திருக்கிறது. 2021-22-ம் ஆண்டில் 775 பேர் பாம்பின் விஷத்துக்குப் பலியாகியிருக்கின்றனர். 2018-19, 2019-20, 2020-21 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் உயிரிழப்புகளின் சராசரி எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டிவிட்டது.

அம்மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4,800 பேர் பாம்புக் கடிக்குள்ளாகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் விஷமற்ற பாம்புகளால் உயிரிழப்பு தவிர்க்கப்படுவது, உடனடி மருத்துவ உதவி கிடைப்பதால் உயிர் பிழைப்பது எனப் பலர் தப்பிவிட்டாலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, மக்கள் பாம்புக் கடிக்குள்ளாகும் வாய்ப்புகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஒடிசா அரசு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. பாம்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் அம்மாநில அரசு தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது.

கிராமப்புறங்களில் பாம்புகளைப் பிடிப்பதற்கென ஆட்களை நியமிப்பது, ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் பாம்புக் கடிக்கென சிறப்பு வார்டுகளை உருவாக்குவது, பாம்புக் கடி சிகிச்சையில் பயிற்சிபெற்றவர்களைப் பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளையும் ஒடிசா அரசு எடுத்துவருகிறது.

வென்டிலேட்டர் உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள், உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் போன்றவற்றை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஒடிசாவில் பாம்புக் கடிக்குப் பிறகு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது என்ன தெரியுமா? இடி - மின்னல் தாக்குதல்தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in