ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சுபான்ஷூ சேகர் தெவூரி
சுபான்ஷூ சேகர் தெவூரி

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபான்ஷூ சேகர் தெவூரி(21). இவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழக (ஐஐடி) விடுதியில் தங்கி பி.டெக் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உணவருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முழுவதும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது.

மாலை ஆறு மணியான பின்பும் அறை மூடியிருந்ததால், சந்தேகமடைந்த சக மாணவர்கள், விடுதி மேனேஜரிடம் தகவல் தெரிவித்தனர்.பின்னர் மேனேஜர் செல்வராஜ், சுபான்ஷு தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டிய போது திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜன்னல் கம்பியில் சுபான்ஷூ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மாணவன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பான்ஷூ தேர்வில் 5 பாடங்களில் தோல்வியடைந்ததாகவும், இதனால் அவர் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விடுதி அறையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 11 தற்கொலைகள் .நடந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in