‘நாட்டு சரக்கு நச்!’: ‘மஹுவா’ போதையில் ருசி கண்ட ஒடிசா யானைகள்

‘நாட்டு சரக்கு நச்!’: ‘மஹுவா’ போதையில் ருசி கண்ட ஒடிசா யானைகள்

ஒடிசா கிராமங்களில் பிரபலமான நாட்டு சரக்கின் போதையில் ருசிகண்ட யானைகளால், கிராம மக்களும் வனச்சரக அலுவலகர்களும் தூக்கம் தொலைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் மஹுவா பூக்களை தண்ணீரில் போட்டு நொதிக்கச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படும் நாட்டு சரக்குக்கு நல்ல மவுசு உண்டு. இயற்கை மூலப்பொருள்களால் தயாராவது மற்றும் உடலுக்கு அதிகம் ஊறு விளைவிக்காதது என்ற நம்பிக்கையால் பாரம்பரியமாக அவற்றை ஊறலிட்டு உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால், அண்மையில் ஷிலிபேடா பகுதியின் முந்திரி காடுகளில் இந்த மஹுவா பானத்தை மிதமிஞ்சி அருந்திய யானைகளால் அமளிதுமளியானது. புதிய குடிகாரர்களால் மஹுவா பானத்தை உற்பத்தி செய்வதும் சவாலாகி உள்ளது.

முந்திரி காடுகளின் ஊடாக வலசை செல்லும் யானைக்கூட்டம் ஒன்று தாக சாந்திக்காக தண்ணீர் என்று நினைத்து மஹுவா சரக்கை அருந்தியிருக்கிறது. போதையுடன் ருசியும் கூடியதில் மிதமிஞ்சி அருந்தியிருக்கின்றன. தலைக்கு போதையேறியதில் அங்கேயே மயங்கி விழுந்திருக்கின்றன. அப்படி மட்டையான 24 யானைகளை ஒருசேர கண்டதும் ஷிலிபேடா மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் அளித்ததில், அவர்கள் ஆராய்ந்து இது மஹுவா தந்த மயக்கம் என கிராம மக்களை தெளிவித்தனர்.

ஆனால் போதையில் மயங்கிய யானைகளை எழுப்பி காட்டுக்குள் அனுப்புவதுதான் வனத்துறையினர் மற்றும் கிராம மக்களுக்கு சவாலாகிப்போனது. தாரை தப்பட்டைகள் முழங்க மணிக்கணக்கில் போராடி அந்த யானைகளை எழுப்ப வேண்டியதாயிற்று. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியின் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து மஹுவா ஊறல்கள் உடைக்கப்பட்டு வருவதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவையனைத்தும் மஹுவா போதைக்கு பழகிய யானைகளின் திருவிளையாடல்கள் என தெரிய வந்ததும் அரைமனதாக அமைதியடைந்தனர்.

யானைகளின் உற்சாக படையெடுப்பால் புதிதாக மஹுவா தயாரிக்க வழியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மஹுவா பானத்தை அருந்துவதால் யானைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று வன அதிகாரிகள் தனியாக விசாரித்து வருகின்றனர். மஹுவா மயக்கம் தீராத யானைகள் தட்டுத்தடுமாறிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in