நிர்வாணத்திருடன் திருடும் காட்சியைப் பார்க்க பிரத்யேக க்யூ ஆர் கோட்: பரிசுப்பொருள்கள் விற்பனையகம் வைத்த போர்டால் பரபரப்பு

நிர்வாணத்திருடன் திருடும் காட்சியைப் பார்க்க பிரத்யேக க்யூ ஆர் கோட்: பரிசுப்பொருள்கள் விற்பனையகம் வைத்த போர்டால் பரபரப்பு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடைக்குள் புகுந்து நிர்வாணமாகத் திருடிய கொள்ளையனுக்கு, கடையின் உரிமையாளர்கள் நூதனமுறையில் தண்டனை வழங்கியுள்ளனர்.

கடைக்கு வெளியே வைத்திருக்கும் பிளக்ஸ்
கடைக்கு வெளியே வைத்திருக்கும் பிளக்ஸ்

திருவனந்தபுரம், மியூசியம் பகுதியில் கல்ச்சர் ஷாப்பி என்னும் பரிசுப்பொருள்கள் விற்பனையகம் இயங்கி வருகிறது. இங்கு விலைமதிப்புமிக்க கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கேரளம் முழுவதிலும் இருந்து கைவினைக் கலைஞர்களிடம் இருந்து நேரடியாக தயாரிப்புப் பொருள்களைப் பெற்று இங்கு விற்பனை செய்துவருகின்றனர். இந்தக் கடையை ரஞ்சித், சந்தோஷ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையில் கடந்த மாதம் திருட்டுப் போனது.

இந்நிலையில் இன்று காலையில் இந்த கடைவாசலில், தங்கள் கடைக்குள் புகுந்து திருடன் திருடிய காட்சிகளை் கடை உரிமையாளர்கள் புகைப்படமாக வைத்துள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால், அந்த மர்ம திருடன் மூன்று நாட்களாக மெல்ல, மெல்ல வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். அதிலும் முழு நிர்வாணமாக உள்ளே வந்து திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

இப்போது கடைவாசலில் வைக்கப்பட்டிருக்கும் பதாகையில் ஆடைகளற்று திருடன் திருடும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பாலின அடையாளப் பகுதி மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. கூடவே முழு நிர்வாணமாகத் திருடன் கடைக்குள் புகுந்து திருடும் காட்சியைப் பார்ப்பதற்கும் பிளக்ஸ் போர்டிலேயே பிரத்யேக க்யூ ஆர் கோட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் ரஞ்சித், சந்தோஷ் ஆகியோர் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “முதல் நாளில் முழுநிர்வாணமாக உள்ளே நுழைந்த திருடன் கேமராவை வேறுபக்கமாகத் திருப்பி வைத்துள்ளான். மறுநாள் உள்ளே நுழைந்தவன் தப்பிச் செல்வதற்கு ஏதுவாக ஜன்னல் கம்பிகளை வளைத்து வைத்துள்ளான். மூன்றாவது நாளில் உள்ளே புகுந்து இன்வெர்டர், யூபிஎஸ்ஸைத் திருடிச் சென்றிருக்கிறான். தன் முகத்தை மட்டும் மறைத்திருந்தான். ஒருமுறை தும்மும்போது, அந்த முகத்தை காட்டியது கேமராவில் பதிவாகியுள்ளது. கைவினைப் பொருள்களின் மதிப்பு திருடனுக்கு தெரியாததால் அவை திருட்டுப் போகவில்லை. நாங்கள் அப்போதே திருவனந்தபுரம் மியூசியம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டோம். போலீஸாரும் அவனைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

நிர்வாணமாகப் போய் திருடினால் சிசிடிவி காட்சியில் பார்ப்பவருக்கு அது ஒவ்வாமையைத் தரும் என்பதுதான் திருடனின் அபிப்ராயம். ஆனால் அதே திருடனுக்கு மிரட்டல்விடுக்கும் வகையில் தான் நிர்வாண திருட்டையே பதாகையாக வைத்துவிட்டோம் ”என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in