புற்றுநோய் விழிப்புணர்வு
புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் 100% உயிரைக் கொல்லுமா? இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

நவம்பர் 7: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

சந்தேகமே வேண்டாம். புற்றுநோய் என்பது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய நோய் தான்! ஆனால் புற்றுநோய் பாதித்த 100% பேரும் அதனால் இறக்க வேண்டியதில்லை. ஆரம்ப நிலையில் அடையாளம் கண்டால், குணம் பெறுவது எளிது. இது உட்பட பல்வேறு விழிப்புணர்வுகளுக்கு வித்திடுவதே, நவ.7 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் நோக்கம்.

சினிமாவில் கதாப்பாத்திரங்களை சுலபமாக சாகடிக்க புற்றுநோய் பாதிப்பை காரணமாக்குவார்கள். அதன்படி புற்றுநோய் கண்டவர்கள் ரத்தம் கக்கி பரிதாபமாக செத்துப் போவார்கள். நிதர்சனத்தில் புற்றுநோய் பாதிப்பில் அந்தளவுக்கு அச்சுறுத்தல் தேவையில்லை. விழிப்பாக இருந்தால் புற்றுநோயை தவிர்க்கலாம். ஆரம்பநிலையில் அதனை அடையாளம் கண்டால் எளிதில் விடுபடவும் செய்யலாம். அறுவை சிகிச்சை முதல் ஸ்டெம் செல் சிகிச்சை வரை நவீன மருத்துவ உபாயங்கள் வளர்ந்திருக்கின்றன.

ஆண்டுதோறும் உலகளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் வளர்ந்து வருகிறது. உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் திசுக்களையும் பாதித்து, இதர அவயங்களுக்கும் எளிதில் பரவி, உயிரை பறிக்கக் கூடியது புற்று. அன்றாட உணவு மற்றும் வாழ்வியல் நடைமுறைகளும் புற்றுநோயை வரவழைக்கின்றன.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

புகை, குடி மட்டுமல்ல, செயற்கை வேதிப் பொருட்கள், பூச்சிமருந்து கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, உழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைவாக இருப்பது, மிகை பருமன் உள்ளிட்ட வாழ்வியல் காரணங்களும் புற்றுநோய்க்கு காரணமாகின்றன.

இது இல்லாது மரபு வழி உள்ளிட்ட இதர காரணங்களாலும் புற்றுநோய் வரக்கூடும். எனவே பாதுகாப்பான வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் முழுமையான உடற்பரிசோதனை போன்றவற்றை முறையாக பின்பற்றுவது புற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கையாக அமையும்.

ஆண்களைப் பொறுத்தளவில் நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் அதிகம் பாதிக்கின்றன. இதுவே பெண்களைப் பொறுத்தளவில் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பவாய் மற்றும் தைராய்டு ஆகியவை அதிகம் பாதிக்கின்றன.

புற்றுநோய் விழிப்புணர்வு
புற்றுநோய் விழிப்புணர்வு

அதிகரிக்கும் புற்றுநோய் பரவல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு, இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவ.7 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 2014-ல் அப்போதைய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷவர்தனின் முன்னெடுப்பால் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் தொடங்கப்பட்டது.

அப்போது தொடங்கி ஆண்டுதோறும் நவ.7 அன்று பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை எடுத்துச் செல்வதற்கான அரசு மற்றும் தனியாரின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புற்றுநோயை தவிர்ப்பதும், அது பீடித்தால் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு விடுபடவும் இந்த விழிப்புணர்வு உதவும். உரிய உணவுப் பழக்கம், உடலோம்பல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் முதல் மருத்துவ காப்பீடு வரை இந்த விழிப்புணர்வுகள் விரிகின்றன.

விழிப்போடு இருப்போம்; நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் புற்றுநோய் பீடிக்காது காப்போம்!

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in