
பழநி மலை கோயிலுக்கு செல்லும் ரோப் கார் பராமரிப்பு பணிகளுக்காக நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மிகவும் புகழ் பெற்றதான பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர் அவர்கள் மலை ஏறுவதற்கு படிப்பாதையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். அது தவிர இழுவை ரயில் மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டிலும் சொகுசாகவும், இயற்கை ரசித்தபடியும் பயணிக்கலாம் என்பதால் இதில் பயணம் செய்ய பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் ரோப் கார் மிகவும் விரைவாக சென்றுவிடும் என்பதால் அதில் செல்வதற்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்த ரோப்கார் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பழநி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை அன்று ஒருநாள் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழநிக்கு வரும் பக்தர்கள் படி பாதை அல்லது யானைப் பாதை வழியாகவோ அல்லது மின் இழுவை ரயில் மூலமோ மலைக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.