
துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16-ம் தேதியன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் மயிலாடுதுறையில் உள்ள புனித இடமான துலா கட்டம் புராணப் பெருமை வாய்ந்தது. மனிதர்கள் தன்னிடம் போக்கிய பாவத்தை தீர்த்துக் கொள்வதற்காக சிவபெருமானை வேண்டிய கங்கை நதிக்கு மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் வந்து நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் கூறியதாக ஐதீகம். அதன்படி கங்கை நதி தன் பாவங்களை போக்கிக்கொண்ட இடமாக துலாக் கட்டம் வழிபடப்படுகிறது.
மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது பக்தர்கள் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்வது வழக்கம். அதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் வழிபடுவார்கள்.
எனவே அதற்கு வசதியாக அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். அதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.