ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்தில் ஜன.6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்தில் ஜன.6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை  முன்னிட்டு நாளை மறுதினம் (ஜன.6) கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவர்களின் கோயில் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கம். ஆண்டு முழுக்கவும் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு உற்சவங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து நடராஜரை  தரிசனம் செய்வதை பாக்கியமாக கருதுவார்கள்.

மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசன நாளாகும்.  திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் உற்சவம் கடந்த டிச.28- ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்  முக்கிய உற்சவமான ஆருத்ரா தரிசனம் நாளை மறுதினம் ( ஜன.6) நடைபெற உள்ளது. தரிசன விழாவை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகமும்,  கடலூர் மாவட்ட நிர்வாகமும்  இணைந்து முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.  அன்றைய தினம் அனைவரும் நடராஜரை  தரிசனம் செய்ய ஏதுவாக கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதனை ஈடு கட்டும் விதமாக ஜன.28- ம் தேதி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in