`என்னை என்கவுன்டரில் கொல்ல போலீஸ் திட்டம்'- சரணடைந்த கொலை குற்றவாளி நீதிபதியிடம் கதறல்

நீதிமன்றத்தில் ஆஜரான சபாரத்தினம்
நீதிமன்றத்தில் ஆஜரான சபாரத்தினம்

அரசு பேருந்தில் பயணம் செய்தவரை கொலை செய்த வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த ரவுடி சபா என்ற சபாரத்தினம் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் இன்று சரணடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அரியமங்கலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியைச் சேர்ந்த பழனிக்குமார், வழிவிட்டான், அழகுமுருகன், முத்துமுருகன் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த நான்கு பேரும் நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேரில் சென்று ஆஜராகி கையெழுத்திட சென்று வந்தனர். அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது, பரமக்குடியை அடுத்த கமுதக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தை வழிமறித்து பத்துக்கும் மேற்பட்டோர் 4 பேரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர்.

இதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். அழகுமுருகன் உயிரிழந்தார். இந்த வழக்கில் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மதுரை மாவட்டம், சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினத்தை தேடிவந்தனர். மேலும், சபாரத்தினம் மீது பல்வேறு வழக்குகள் மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருவதால், இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனக்கூறி சபாரத்தினம் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3-ல் மேஜிஸ்ட்ரேட் முன்பு சரணடைந்தார். தன் மீது பொய்யான வழக்குகளை மதுரை மற்றும் பரமக்குடி காவல்துறையினர் போட்டுள்ளதாகவும் தன்னை காவல்துறையினர் என்கவுன்டரில் கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு வருவதால் அதில், இருந்து தன்னை காப்பாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து உள்ளதாகவும், அந்த மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும், இந்நிலையில் காவல்துறையினர் தன்னை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இல்லாமல் தேடி வருவதால் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவித்தார்.

இதையடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவர், சபாரத்தினத்தை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சபாரத்தினம் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள சபாரத்தினம் கடந்த 2013-ம் ஆண்டு மதுரையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in