
2021-ம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததால் சாலை விபத்துக்களில் 16,397 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 8,438 பேர் ஓட்டுநர்கள், மீதமுள்ள 7,959 பேர் பயணிகள் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
'இந்தியாவில் சாலை விபத்துகள் - 2021' என்ற தலைப்பில் வெளியான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையில், 2021-ம் ஆண்டில், ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துக்களில் மொத்தம் 46,593 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 32,877 ஓட்டுநர்கள் மற்றும் 13,716 பயணிகள் ஆவர். 2021-ம் ஆண்டில் மொத்தம் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர், 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஹெல்மெட் அணியாததால் 93,763 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் 39,231 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகள் 8.1 சதவிகிதம் குறைந்துள்ளது மற்றும் காயங்கள் 14.8 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ல் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது
2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை சராசரியாக 12.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் 16.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக நாட்டில் ஒவ்வொரு நாளும் 1130 விபத்துக்கள் மற்றும் 422 இறப்புகள் பதிவாகிறது. அதுபோல ஒவ்வொரு மணிநேரமும் 47 விபத்துக்கள் மற்றும் 18 இறப்புகளும் பதிவாகின்றன.
அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் 18-45 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் 67.6 சதவிகிதமாக உள்ளனர். அதே நேரத்தில் 18-60 வயதுடையவர்கள் மொத்த சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 84.5 சதவிகிதமாக உள்ளனர்.
2021-ம் ஆண்டில், நாட்டில் பதிவான 4,12,432 விபத்துகளில், 1,28,825 விபத்துகள் (31.2 சதவீதம்) தேசிய நெடுஞ்சாலைகளில், 96,382 விபத்துகள் (23.4 சதவீதம்) மாநில நெடுஞ்சாலைகளிலும், மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகளும் (45.4 சதவீதம்) நடந்துள்ளன.
மாநிலங்களில், 2021-ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. அதேசமயம், சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தரபிரதேசத்தில்தான் அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.