உயிரைப் பறித்தது: மூக்கு அழகுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி!

மூக்கு - பிளாஸ்டிக் சர்ஜரி
மூக்கு - பிளாஸ்டிக் சர்ஜரி

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மூக்கு அழகுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்டது, அவரது உயிரையே பறித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திரை நட்சத்திரங்கள் மற்றும் மாடல்கள் மத்தியில் நிலவிய, அழகுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி ஆர்வங்கள் தற்போது வெகுஜன மக்கள் மத்தியிலேயும் பரவி வருகின்றன. தீக்காயங்கள், விபத்து மற்றும் ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு ஆளானவர்களின் உருக்குலைந்த முகம் உள்ளிட்ட அங்கங்களின் பொலிவை மீட்பதில் பிளாஸ்டிக் சர்ஜரி முக்கியப் பங்கு வகிக்கிறது.

நவீன மருத்துவ நடைமுறைகள் அதற்கான செயல்பாடுகளை எளிமையாக்கியதுடன், சாமானியர்களுக்கு எட்டாதிருந்த மருத்துவ செலவினங்களையும் எளிமையாக்கி உள்ளது. அந்த வகையில், மூக்கு மற்றும் உதடு வடிவமைப்பில் திருத்தம் செய்வது, முன் - பின் அழகுகளை மேம்படுத்துவது என பெண்களின் விருப்பத்துக்குரிய வகையில் பிளாஸ்டிக் சர்ஜரிகள் வரவேற்பு பெற்றும் வருகின்றன.

மியா கலிஃபாவின் மூக்கு - பிளாஸ்டிக் சர்ஜரி
மியா கலிஃபாவின் மூக்கு - பிளாஸ்டிக் சர்ஜரி

ஆனால் இவற்றில் ஒவ்வாமை, பக்கவிளைவு உள்ளிட்ட பாதிப்புகள் அடங்கி இருக்கின்றன. அவற்றின் உச்சமாக, மூக்கின் அழகுக்காக செய்யப்பட்ட மிக எளிமையான பிளாஸ்டிக் சர்ஜரி உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமானது என்பதும் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அங்கே அதிகம் அரங்கேறி வரும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைகள் கேள்விக்கு உள்ளாகி வருகின்றன.

கொலம்பியாவை சேர்ந்தவர் 21 வயதாகும் கரேன் ஜூலியத். பொலிவாரியன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு சைக்காலஜி படிக்கும் அவருக்கு நீண்ட காலமாக மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஒரு செமஸ்டர் தேர்வோடு கல்லூரிப் படிப்பும் முடிய இருப்பதால், பிளாஸ்டிக் சர்ஜரி கனவை ஈடேற்ற முடிவு செய்தார். நண்பர்கள் எடுத்துச் சொன்ன மூக்கு அமைப்பின் சிறு திருத்தம் தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரித்தார். எளிய அறுவை சிகிச்சையை முடித்து அப்போதே வீடு திரும்பலாம் என மருத்துவர்களும் அதற்கு நாள் குறித்தனர்.

அதன்படி தனது அண்ணனோடு மருத்துவமனை சென்ற ஜூடித், சில மணி நேரங்களுக்கு நீடித்த பிளாஸ்டிக் சர்ஜரி முடித்து உடனடியாக வீடு திரும்பினார். ஆனால் வீட்டில் அவர் மயங்கி விழவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை போனில் விசாரித்தனர். மருந்துகள் உட்கொண்டதின் பக்க விளைவாக இருக்கும் என்று பதிலளித்த மருத்துவர், எதற்கு ஒரு முறை மருத்துவமனை வந்து பரிசோதித்து செல்லுங்கள் என்றார். அதற்குள் ஜூடித் நெஞ்சு வலியால் துடிக்கவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஜூடித்தை ஐசியூவில் வைத்து பரிசோதித்த மருத்துவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி காரணமாக அவரது இரு நுரையீரல்களிலும் ரத்தம் சேர்ந்திருப்பதாகவும், அவற்றை அகற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து 6 முறை இதய அடைப்புக்கு ஆளான ஜூடித், முடிவில் பரிதாபமாக இறந்தார்.

பூரண உடல் நலத்தோடு இருந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி காரணமாகவே மரணம் நேர்ந்திருப்பதாக, மூக்கழகு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் மருத்துவமனைக்கு எதிராக ஜூடித்தின் குடும்ப சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறது. தேகப் பொலிவுக்காக பிளாஸ்டிக் சர்ஜரிகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அமெரிக்காவில், ஜூடித்தின் மரணம் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in