தாயின் மடியில் இருந்த குழந்தையைப் பறித்துச் செல்ல முயன்ற வாலிபர்... கதறிய பெண்கள்: சுற்றி வளைத்த பொதுமக்கள்

தாயின் மடியில் இருந்த குழந்தையைப் பறித்துச் செல்ல முயன்ற வாலிபர்... கதறிய பெண்கள்: சுற்றி வளைத்த பொதுமக்கள்

பட்டப்பகலில் வீடு புகுந்து தாயிடம் இருந்து 7 நாள் குழந்தையைப் பறித்துச் செல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தாக்கிய சம்பவம் ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அரசனடிப் பகுதியைச் சேர்ந்தவர் அபிநவ் (30). இவரது மனைவி நதியா. இவர்களுக்கு 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அபிநவ் வீட்டின் அருகே கம்பெனி நடத்தி வருகிறார்.

சம்பவ நாளான இன்று நதியாவும், அவரது தாய் வள்ளியும் வீட்டின் முன்பு குழந்தையை வைத்திருந்தனர். அப்போது அவர்களது வீட்டு காம்பவுண்ட் சுவரை வடமாநில இளைஞர் ஏறி குதித்துள்ளார். அத்துடன் நதியாவின் கையில் இருந்த குழந்தையைப் பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நதியாவும், வள்ளியும் சத்தம் போட்டனர். இதைக் கேட்ட அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து குழந்தையைப் பறித்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அபிநவ், ஒசூர் சிப்காட் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து வடமாநில இளைஞரை மீட்டனர். பின் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்து தடியால் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு நின்றவர்கள் இளைஞரை வளைத்துப் பிடித்து அவசர வார்டுக்கு அழைத்து சென்றனர். போலீஸாரின் விசாரணையில், அவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தாயிடம் இருந்து வடமாநில இளைஞர் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in