கோவையில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு: 3 லட்சம் பேர் குவிந்ததால் உள்ளூர்வாசிகள் திண்டாட்டம்

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு: 3 லட்சம் பேர் குவிந்ததால் உள்ளூர்வாசிகள் திண்டாட்டம்

கோவையில் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்குச் சேர்ந்ததால், உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.

இதில் கிராமப்புறங்களைச் சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளைச் சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன.

கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.

அதேபோல் கோவை ராஜா வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா நகர், செல்வபுரம், சலீவன் வீதி, காந்திபார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகளும், நகை தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன.

இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் கோவை மாவட்டத்தில் ஜவுளி தொழில்நிறுவனங்கள், நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் பிற மாவட்ட, மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர ஐ.டி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், இதர அலுவலகங்கள் என பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

கோவையில் பிஹார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானம், ரயில்வே பொருட்கள் உற்பத்தி, இரும்பு நிறுவனங்கள், காஸ்டிங் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்து வருகின்றனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்கள் அதிக அளவில் வேலைக்கு பணியமர்த்தப்படுவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ரயில்வே, அஞ்சல்துறைகளைத் தொடர்ந்து கூலி வேலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "குறுந்தொழில் நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில்நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணி புரிவதற்குக் காரணம் உள்ளூர் தொழிலாளர்கள் உற்பத்தி மற்றும் அதை சார்ந்த தொழில்நிறுவனங்களை பெரிதும் விரும்புவது இல்லை. அவர்கள் நினைக்கும் சம்பளம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். குறுந்தொழில்களில் முன்பை போல் வருவாய் கிடைப்பதில்லை. வடமாநில தொழிலாளர்கள் கிடைக்கும் வேலையைச் செய்ய தயாராக உள்ளனர். அவர்களில் தொழில்நிறுவனங்களில் வேலை கற்றுக்கொள்பவர்களை பணிக்கு எடுத்துக்கொள்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் குடும்ப பின்னனி கொண்டவர்களே தொழில்நிறுவனங்களுக்கு வருவதில்லை. இதனால் ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in