இன்று தொடங்குகிறது பருவ மழை:12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று தொடங்குகிறது பருவ மழை:12 மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்று துவங்க உள்ள நிலையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையைத்  தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ம்  தேதியான இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்களும் இன்று மழை தொடங்கும்  என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப புதுச்சேரி, கடலூர்  உட்பட வட மாவட்டப் பகுதிகளில் கடற்கரை ஓரங்களில்  பல பகுதிகளிலும் இரவே மழை தொடங்கியிருக்கிறது.  டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் லேசான மழையும் பெய்திருக்கிறது.  

இந்த நிலையில் இன்று தஞ்சை, நாகை,  மயிலாடுதுறை,  கடலூர் திருவாரூர், அரியலூர் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா உள்பட தென் இந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தை பொறுத்தவரையில் இயல்பையொட்டியே பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in