நீலகிரியில் நிலச்சரிவு: தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நிலச்சரிவு
நிலச்சரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நீர் நிலைகளில் வரத்து அதிகரித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை, கடந்த 10 நாட்களாக தீவிரமாகி, கனமழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுக்காக்களை மழை புரட்டி போட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்தனர். இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை முதல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்று மொஹரம் பண்டிகையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், 9 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. இந்நிலையில் மஞ்சூர் அருகே எமரால்டில் உள்ள லாரன்ஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பும் ஏற்பட்டவில்லை. மண் சரிந்து சாலையில் விழுந்ததால், அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினர்.

இதே போல் இத்தலார் போர்த்தி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இங்கும் மண்ணை அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.

தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பியதால், குந்தா , பைக்காரா அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை 500 கன அடி நீர் வரும் நிலையில், 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இதே போல அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அவை எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முள்ளிகூர் ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கூடலூர் மாங்குழி பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அங்கு ஆற்றோரம் இருந்த வீடு ஆற்றில் சரிந்த விழுந்தது. கூடலூர் கிளை நூலக கட்டிடம் இடிந்தது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கன மழையின் தீவிரம் குறைந்து இன்று காலை முதல் மீதமான மழை பெய்து வருவதால், மீ்ட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மழை குறைந்து வெள்ளம் வடிந்த பின்னரே சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரிய வரும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் நேற்று மரம் விழுந்து உயிரிழந்த சுமதி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அலுவலர்களை கொண்டு முழு வீச்சில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in