கின்னஸ் உலக சாதனை: ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

கின்னஸ் உலக சாதனை: ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

ஒரே பிரசவத்தில் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் மாலி தேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

ஆப்ரிக்க தேசமான மாலியை சேர்ந்த ஹலிமா என்ற கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். ஹலிமா வயிற்றில் ஒன்று, இரண்டல்ல.. மொத்தம் 7 கருக்கள் உருப்பெற்று வளர்ந்து வந்தன. இத்தனை குழந்தைகளை எதிர்நோக்கும் பிரசவத்துக்கான மருத்துவ வசதி மாலியில் இல்லாததால், அவர் உடனடியாக பக்கத்து ஆப்ரிக்க தேசமான மொராக்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஹலிமாவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஹலிமா வயிற்றை ஸ்கேன் செய்த மொராக்கோ மருத்துவர்கள், 9 கருக்கள் இருப்பதாக உறுதி செய்தனர். ஹலிமா மட்டுமன்றி மருத்துவர்களும் பதட்டமானார்கள். 7 மாதங்கள் ஆகிய சூழலில், 9 குழந்தைகளையும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் மொராக்கோ மருத்துவர்கள் காப்பாற்றினர். இம்மாதிரி அதிக எண்ணிக்கையிலான கருக்கள் தரித்தாலும், அத்தனை சிசுக்களும் உயிரோடு பிறப்பது அரிது.

இதுவே ஹலிமாவை கின்னஸ் சாதனையிலும் ஏற்றியது. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்பது உலகளவில் ஆங்காங்கே நடந்தபோதிலும், அத்தனை குழந்தைகளும் உயிரோடு மிஞ்சுவது கடினம். இந்த வரிசையில் 2009-ல் அமெரிக்க பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்ததே கின்னஸ் சாதனையாக நீடித்தது. தற்போது அந்த சாதனையை ஹலிமா முறியடித்திருக்கிறார்.

9 குழந்தைகளில் 5 பெண், 4 ஆண் ஆவர். கடந்த வருடம் மே மாதம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்ததில், 19 மாதங்கள் மொராக்கோவிலே தங்கி ஹலிமா குடும்பத்தினர் நவ வாரிசுகளை பராமரித்தனர். கடந்த வாரம் குழந்தைகள் சகிதம் மாலிக்கு திரும்பினர். இதனையடுத்து கின்னஸ் உலக சாதனைக்கான அங்கீகாரம் ஹலிமாவுக்கு கையளிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனைக்கான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in