மன்னர்கள் காலத்திலேயே பிராமணர் அல்லாதவர்கள் அச்சகர்களாக இருந்தனர்: செப்பேடு ஆதாரங்களைக் காட்டும் பேராசிரியர் சாந்தினிபீ

மன்னர்கள் காலத்திலேயே பிராமணர் அல்லாதவர்கள் அச்சகர்களாக இருந்தனர்: செப்பேடு ஆதாரங்களைக் காட்டும் பேராசிரியர் சாந்தினிபீ

தமிழகக் கோயில்களில் மன்னர் காலத்தில் அர்ச்சகர்களாக பிராமணர் அல்லாதவர்கள் அமர்த்தப்பட்டதாக கல்வெட்டு உள்ளது என அலிகர் முஸ்லீம் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர்,எஸ்.சாந்தினிபீ சுட்டிக் காட்டியுள்ளார். இது, உச்ச நீதிமன்றத்தில் தமிழகக் கோயில்கள் நிர்வாகப் பிரச்சினை வழக்கில் தமிழக அரசிற்கு கேட்ட விளக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். இதில், தமிழகக் கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்து தமிழக அரசு இட்ட ஆணைக்கு தடை விதிக்கும்படி கோரியுள்ளார். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 29-ல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றது. இதன் மீது தமிழக அரசிடம் விளக்கம் கேட்டும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசிற்கு கேட்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு முக்கிய ஆதாரம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதை உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறையின் பேராசிரியரும், தமிழருமான முனைவர்.எஸ்.சாந்தினிபீ முன் வைத்துள்ளார். இவர், கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்று ஆய்வுகள் செய்து ஆய்வுக்கட்டூரைகளையும், நூல்களையும் வெளியிட்டு வருபவர். கடைசியாக இவரது ’கல்வெட்டுகளில் தேவதாசி’ எனும் நூலின் இரண்டாம் பதிப்பு கடந்த வருடம் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து பேராசிரியர் சாந்தினிபீ கூறியதாவது: தமிழகத்தின் பழங்காலக்  கோயில்களை அமைத்தவர்கள் அதற்கான நிதி, நிர்வாகங்களையும் மிகத்தெளிவாக முறைப்படுத்தி உள்ளனர். இதன் மீதான செப்பு பட்டயங்கள் இன்றும் நம் கண்முன் அரசர் காலத்து சாட்சிகளாக உள்ளன. இதற்கான முக்கிய உதாரணம், அன்று கச்சிப்பேடு என்றழைக்கப்பட்ட நமது காஞ்சிபுரத்து உலகளந்தப் பெருமாள் கோயிலின் ஒரு செப்பேடு.

’மெட்ராஸ் மியூசியம் செப்பேடு’ என்று பரவலாக அறியப்படும். ஐந்து ஏடுகளை கொண்ட இது, இன்றும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. முக்கிய செய்திகள் கொண்ட இதன் முடிவில் மட்டும் ஓரிரண்டு ஏடுகள் காணாமல், சில விடயங்கள் கிடைக்கவில்லை. இது, உத்தம சோழனின் 16-வது ஆட்சி ஆண்டில்(பொது ஆண்டு 985) வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டின் 5-ம் ஏடு இரண்டாம் பக்கத்தில் 115-118 வரிகளில் காணப்படுகிறது.

இச்செப்பேட்டில், பிராமணர்கள் மட்டுமே கோயில்களில் துவக்கம் முதல் பூஜை செய்தார்கள் என்ற கருத்தை மறுக்கும் வகையில் ஒரு ஆதாரம் பதிவாகி உள்ளது. இதில்,‘பெருமாள் கோயிலின் வழிபாடு செய்ய கோயில் வழிபாடு நடைமுறைகளை நன்கு அறிந்து அவற்றில் தேர்ந்த ஸ்ரீகோயில் நம்பிமார் கிடைக்காது போனால், வேதங்களில் வல்ல பிராமணரை வழிபாடு செய்ய நியமிக்க வேண்டும்.’ எனக் குறிப்பு உள்ளது.

எனவே, கோயில்களில் பிராமணர்கள் அல்லாதவர்களே  அர்ச்சகர்களாக இருந்ததும் இவர்கள், பிற்காலத்தில் ஆள்பற்றக்குறை காரணமாக இப்பணியில் அமர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது. கோயில்களை கட்டிய மன்னர்கள், அவற்றை நிர்வாகிப்பதில் இன்றைய அரசு மற்றும் நீதித்துறைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிக கவனம் செலுத்தி உள்ளனர். குறிப்பாக, சோழ மன்னர்கள் காட்டியக் கவனத்தில் எந்த குறைகளையும் காண முடியாது. இவர்கள், ஆழ்ந்து ஆலோசித்து முடிந்த வரையில் தவறான பயன்பாட்டை தடுக்க முயற்சித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in