நொடிகளில் தகர்க்கப்பட்ட நொய்டா இரட்டை கோபுரம்!

நொடிகளில் தகர்க்கப்பட்ட நொய்டா இரட்டை கோபுரம்!

நொய்டாவின் சூப்பர்டெக் இரட்டை கோபுரம், இன்று தகர்க்கப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டபடி 9 விநாடிகளில் இந்தக் கட்டிடம் தகர்க்கப்பட்டது. 100 மீட்டர் உயரம் கொண்ட ஏபெக்ஸ், 97 மீட்டர் உயரம் கொண்ட சியேன் ஆகிய இரண்டு கட்டிடங்களைக் கொண்ட இந்த இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட காட்சியை அருகில் வசிக்கும் ஏராளமானோர் நேரில் பார்த்தனர்.

நொய்டா செக்டர் 93 ஏ பகுதியில், இந்தக் கட்டிடம் கட்டப்பட்ட நிலத்தில், முன்னதாக ஒரு பூங்கா அமைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு மாறாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் பகுதியில் வசிக்கும் மக்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் 3 மாதங்களில் இந்தக் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என 2021 ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. எனினும், தொழில்நுட்பச் சிக்கல்களால் இந்தக் கட்டிடத்தை இடிக்கும் பணி ஏறத்தாழ ஓராண்டு தாமதமாகிவிட்டது. இன்று மதியம் 2.30 மணி அளவில் இக்கட்டிடம் தகர்க்கப்பட்டது.

மும்பை நிறுவனம்

மும்பையைச் சேர்ந்த எடிஃபிஸ் இன்ஜினியரிங் எனும் நிறுவனம், இந்தக் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டது. அருவி தொழில்நுட்பம் (வாட்டர்ஃபால் டெக்னிக்) படி, இடிக்கப்படும் கட்டிடத்தின் பாகங்கள் வெளியில் விழாமல் உள்ளுக்குள்ளேயே விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்தக் கட்டிடத்தை இடிப்பதற்கு 3,700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடத்தின் தூண்களில் 7,000 துளைகள் இடப்பட்டு அவற்றில் வெடிபொருட்கள் செருகப்பட்டிருந்தன. இந்த வெடிபொருட்கள் வெடிக்கச் செய்யப்பட்டதும் சரியாக 9 விநாடிகளில் இந்தக் கட்டிடம் முற்றிலும் தகர்க்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் 55,000 டன் கட்டிட இடிபாடுகள் கிடக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அகற்ற மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

முன்னதாக, இன்று காலை அந்தக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 7,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களின் வீடுகளில் உள்ள மின் இணைப்பு, கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அவை திரும்ப வழங்கப்பட்டன. 5.30 மணிக்கு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூசு அதிகம் இருக்கும் என்பதால் முகக்கவசம் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டிடம் கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரெஸ்வே பகுதியில் அமைந்திருப்பதால், மொத்தம் அரை மணி நேரம் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏபெக்ஸ் கட்டிடத்தில் 32 தளங்களும், சியேன் கட்டிடத்தில் 29 தளங்களும் இருந்தன. முன்னதாக இரண்டு கட்டிடங்களிலும் தலா 40 தளங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றுவிட்ட நிலையில், கட்டிடத்தின் சில பகுதிகள் நிறைவுசெய்யப்படவில்லை. சில தளங்கள் இடிக்கப்பட்டுவிட்டன. அடுக்குமாடிக் குடியிருப்பான இந்தக் கட்டிடத்தில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகள் விற்பனை / புக் செய்யப்பட்டிருந்தன. அவர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in