மருத்துவமனைக்குச் செல்ல சாலைவசதி கிடையாது: தாயின் கண்முன்னே இறந்த இரட்டை குழந்தைகள்

மருத்துவமனைக்குச் செல்ல சாலைவசதி கிடையாது: தாயின் கண்முன்னே இறந்த இரட்டை குழந்தைகள்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மொகடா தாலுகாவில் வசிக்கும் வந்தனா புதர் கர்ப்பமாக இருந்தார். மலைப்பாங்கான இவர்களின் ஊருக்கு சாலைவசதி கிடையாது. எனவே இவர்களால் அவசர மருத்துவ சேவையை பெற முடியாமால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் வந்தனாவுக்கு ஏழு மாதங்களிலேயே குறை பிரசவத்தில் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் இரட்டைக் குழந்தைகள் வலுவிழந்து, முறையான மருத்துவ வசதி இல்லாமல் தாயின் கண்முன்னே உயிரிழந்தனர்.

இரு குழந்தைகளும் இறந்த அதிர்ச்சியில் இருந்த தாய்க்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் பாறைகள் நிறைந்த கரடு முரடான, வழுக்கும் சரிவுகளைக் கடந்து, குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பெண்ணை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்தனர். ஒரு மரத்தில் போர்வையை கட்டி தற்காலிக ஸ்ட்ரெச்சரை அவர்கள் உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் தூக்கி வந்தனர். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் சித்ரா கிஷோர் வாக், “இந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. புதாரின் இரட்டை குழந்தைகள் சரியான நேரத்தில் மருத்துவம் கிடைக்காததால் இறந்துள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்கின்றன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே, “இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வேளையில் ஏழைகள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது" என தெரிவித்தார்.

முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால், மருத்துவம் கிடைக்காமல் இரட்டை குழந்தைகள் இறந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in