`நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலத்தில் சாலை அமைக்கக்கூடாது'

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
`நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலத்தில் சாலை அமைக்கக்கூடாது'

விவசாய நில உரிமையாளரின் ஒப்புதல் பெறாமல், நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் விவசாய நிலத்தில் சாலை அமைக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூர் கோபாலபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர் வட்டம் எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமான 3.75 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறேன். கடந்த ஜூன் 26-ல் குச்சம்பட்டி ஊராட்சி சார்பில் என் விவசாய நிலத்தின் நடுவே தார்சாலை அமைக்க வந்தனர். இந்த விவசாய நிலத்தை நம்பியே என் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இதனால் என் விவசாய நிலத்தின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தாழை முத்தரசு வாதிட்டார். பின்னர் நீதிபதி, மனுதாரரின் பட்டா நிலத்தில் சாலை அமைக்க வேண்டும் என்றால் அவரது ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலத்தை கையகப்படுத்தியிருக்க வேண்டும். இதை செய்யாமல் விவசாய நிலத்தில் சாலை அமைக்க முடியாது. எனவே, மனுதாரர் விவசாய நிலத்தில் சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in