அனைத்தும் திட்டமிட்ட சதி; பின்னணியில் யார்?- பகீர் கிளப்பும் பீட்டர் அல்போன்ஸ்

அனைத்தும் திட்டமிட்ட சதி; பின்னணியில் யார்?- பகீர் கிளப்பும் பீட்டர் அல்போன்ஸ்

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மதமாற்றம் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அனைத்தும் திட்டமிட்ட சதி என்றும் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ பள்ளியில், பல மாணவ- மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு என தனியாக விடுதியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி இந்த பள்ளியில் மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, தமிழக ஆளுநரை சந்தித்து 85 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், விடுதியில் நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்தும், விடுதியில் மாணவியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றும் விடுதியில் மதமாற்றம் செய்யக்கோரி மாணவிகளிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், புகாருக்கு உள்ளான தனியார் பள்ளியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் உறுப்பினர்கள் இன்று விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "அரசுக்கு கெட்ட பெயர் வருவதற்காகவும் சமூகங்களுக்கு மத்தியிலே மிகப்பெரிய வெறுப்பு வளர்ப்பதற்காகவும் தான் மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையம் செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். நாங்கள் இப்போது 50க்கும் மேற்பட்ட பெற்றோர்களை சந்தித்தோம். மதமாற்றம் தொடர்பாக பெற்றோர்களுடன் நாங்கள் கேட்டோம். அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், எங்க குழந்தைகள் எங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதைவிட பள்ளிக்கூடத்தில் அதிகமாக பாதுகாப்பு இருப்பதாக கூறினார்கள்.

நீங்கள் (பத்திரிகையாளர்கள்) வேண்டுமானால் அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். ஆகவே இதைப் போன்ற ஒரு சதியை உள்நோக்கத்துடன் செயல்படுத்துகிறார்கள். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. சரஸ்வதி ரங்கசாமியே இதில் வருகிறார்களா அல்லது அவரை யாராவது சொல்லச் சொல்லி வற்புறுத்தினார்களா?, இது போன்ற செய்திகளை ஊடகங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறினார்களா? இதெல்லாம் கேள்விகள். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்க வேண்டும்.

தமிழகத்தில் சமூக அமைதியும், மத நல்லிணக்கமும், ஏழை எளிய மக்களுக்கான சமூக நல திட்டங்களும் எந்தவிதமான தடங்கள் இன்றி நடைபெற்று வரும் சூழ்நிலையில் தமிழகத்தின் முன்னேற்றத்தை, சமூக அமைதியை, வளர்ச்சியை, சீர்குலைப்பதற்காகவே இது போன்ற செயல்கள் முன்னெடுக்கப்படுகிறது என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். இது பற்றி நாங்கள் விரிவாக ஒரு அறிக்கை தயாரித்து முதல்வருக்கு அனுப்பி வைப்போம். முதல்வரிடம் இதுப்போன்ற எந்த விதமான ஒரு விதிமுறைகளுக்கும் உள்ளே வராத ஒரு பள்ளி நிர்வாகத்தை மிரட்டுவதற்கும், சீர்குலைப்பதற்கும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விக்குறி ஆக்குவதற்கும் அரசாங்கத்தின் ஆணையம் என்று சொல்லி கொள்ளக்கூடிய ஒரு அமைப்பே இப்படி செயல்படக்கூடியது என்பது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அந்த உறுப்பினர் மேல் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இதேபோன்று ஆரம்பித்து விட்டால் தமிழகம் முழுவதும் விஷம்போல் பரவி எல்லா ஊர்களிலும் இது போன்ற ஒரு வெறுப்பு அரசியலை தூண்டிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in