‘ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி வாங்குவதை நிறுத்திவிட்டோம்’

டாடா ஸ்டீல் நிறுவனம் விளக்கம்
‘ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி வாங்குவதை நிறுத்திவிட்டோம்’

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஏப்ரல் மாதம் முதல் அந்நாட்டிடமிருந்து நிலக்கரி வாங்குவதை நிறுத்திவிட்டதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவுடனான வணிகத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

தூளாக்கப்பட்ட நிலக்கரியை ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கிவந்த டாடா ஸ்டீல் நிறுவனம், உலோகவியல் உலைக்களனில் அதை ஒரு துணை எரிபொருளாகப் பயன்படுத்திவந்தது. இந்நிலையில், உக்ரைன் போரைக் காரணம் காட்டி, அந்நாட்டிலிருந்து நிலக்கரி வாங்குவதை நிறுத்துவதாக ஏப்ரல் 10-ல் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்துவரும் டாடா ஸ்டீல் நிறுவனம், ரஷ்ய நிலக்கரிக்குப் பதிலாக வேறு நாடுகளிலிருந்து நிலக்கரி வாங்கும் பணிகளில் இறங்கியிருக்கிறது. எனினும், அதன் பின்னரும் அந்நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி வாங்குவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுதொடர்பாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷ்யாவிடமிருந்து டாடா ஸ்டீல் நிறுவனம் நிலக்கரி வாங்குவது / இறக்குமதி செய்வது குறித்து சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

“ரஷ்யாவிடமிருந்து 75,000 டன் தூளாக்கப்பட்ட நிலக்கரியை வாங்குவதற்கான ஒப்பந்தம் மார்ச் மாதமே இறுதிசெய்யப்பட்டது. அந்த வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து தூளாக்கப்பட்ட நிலக்கரி எங்களுக்கு வந்து சேர்ந்தது” என்று கூறிய அவர், ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி வாங்குவதில்லை என்று ஏப்ரல் மாதம் அறிவித்த பின்னர் அந்நாட்டிடமிருந்து நிலக்கரி வாங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

“ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் எனும் அடிப்படையில், எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in