ரஷ்யா விவகாரம்: இந்தியாவுக்கு அழுத்தம் தந்தாரா பிரிட்டன் பிரதமர்?

ரஷ்யா விவகாரம்: இந்தியாவுக்கு அழுத்தம் தந்தாரா பிரிட்டன் பிரதமர்?

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டை மாற்ற முயற்சி செய்வார் என்றும், இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசுவார் என்றும் செய்திகள் வெளியாகின.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அந்நாட்டுடனான வர்த்தக உறவை இந்தியா தயக்கமின்றி தொடர்கிறது. குறிப்பாக, தள்ளுபடி விலையில் ரஷ்யா வழங்கும் கச்சா எண்ணெய்யை வாங்குவது, ராணுவத் தளவாட இறக்குமதியைத் தொடர்வது, மருத்துவ சாதனங்களை ஏற்றுமதி செய்வது என இந்தியா தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

போர் நிறுத்தத்தை விரும்பினாலும் ரஷ்யா விஷயத்தில் நேரடியான எதிர்ப்பை இதுவரை இந்தியா காட்டவில்லை. ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்காமலும் விலகி நின்றது.

இந்தச் சூழலில், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களைச் சாந்திருக்கும் நிலையிலிருந்து இந்தியா வெளியேற உதவும் யோசனைகளை பிரதமர் மோடியிடம் போரிஸ் ஜான்சன் முன்வைப்பார் என்று அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று காலை குஜராத் வந்திருந்த போரிஸ் ஜான்சன், நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய அவர், ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற முயற்சி எடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

“இருவரும் உக்ரைன் விவகாரம் தொடர்பாகக் கலந்தாலோசித்தனர். எனினும், அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் தனது பார்வையை முன்வைத்துப் பேசினார். பிரதமர் மோடி இந்தியாவின் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்றார். இதில் எந்த விதமான அழுத்தமும் இருக்கவில்லை” என்று ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.