இந்த மீட்டருக்கு இனி இலவச 100 யூனிட் கிடையாது: பல மடங்கு எகிறியது மின் கட்டணம்!

இந்த மீட்டருக்கு இனி இலவச 100 யூனிட் கிடையாது: பல மடங்கு எகிறியது மின் கட்டணம்!

பொதுவான மீட்டருக்கு இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது என்றும் அவற்றிற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அப்போது, 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர் கூடுதலாக 55 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் கூறியிருந்தது. அதே நேரத்தில், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பது தொடரும் என்றும் 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதி கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய நுகர்வோர்களுக்கு மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், புதிய மின் கட்டணத்தின்படி 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் தற்போது 1,130 ரூபாயில் இருந்து 1,725 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் 500 முதல் 600 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் 1,786 ரூபாயில் இருந்து 1,958 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது தமிழ்நாடு மின்சார வாரியம்.

இந்த நிலையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோர் 2 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் வாடகை வீடுகளில் குடியிருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏ.சி. பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரித்தது. இதுவரையில் 1-A என்ற அடிப்படையில் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவசமாக பொது பயன்பாட்டிற்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வந்தது. தற்போது 1-D ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமான ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் 3 சமையல் அறை கொண்ட வீடுகள் இருந்தால் 3 மின் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக நான்காவதாக உள்ள ஒரு மீட்டர் பொதுவான மின்விளக்கு, குடிநீருக்கான மோட்டார் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த மீட்டருக்கு இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவற்றிற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணம் 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என்றும் இதனால் சாமான்ய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் ஏழை மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் தற்போது, மின் கட்டண உயர்வு ஏழைகளின் தலையில் இடி விழுந்ததைப்போல் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in