
தங்கையின் திருமணத்திற்காக ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காரைக்காலில் நடந்திருக்கிறது.
நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பதற்காக பல வழிகளில் முயன்று இருக்கிறார். ஆனால் தங்கையின் திருமணத்திற்கு தேவையான பணம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த விக்னேஷ்வரன் கொள்ளை முயற்சியில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.
அதன்படி புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு வந்துள்ளார் விக்னேஷ்வரன். அங்குள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஆவேசமடைந்த விக்னேஸ்வரன், சம்மட்டியால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தார். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்தெறிந்தார். இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வாலிபர் விக்னேஷ்வரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தங்கையின் திருமணத்திற்காக வாலிபர் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.