‘ஒரு பண்டிட் கூட காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை’ - உள் துறை இணையமைச்சர் சொல்வது உண்மையா?

‘ஒரு பண்டிட் கூட காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை’ - உள் துறை இணையமைச்சர் சொல்வது உண்மையா?

காஷ்மீரில் வசித்துவரும் 6,514 பண்டிட்களும் அங்கேயே வசிப்பதாகவும், 2022-ம் ஆண்டில் அவர்களில் ஒருவர்கூட காஷ்மீரைவிட்டு வெளியேறவில்லை என்றும் மத்திய உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று தெரிவித்திருக்கிறார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டக்கூறு 2019 ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்ட பின்னர், ஒரு காஷ்மீர் பண்டிட் கூட வெளியேறவில்லை என கடந்த வாரம் கூறியிருந்த நித்யானந்த் ராய் இன்று இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார். சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜாவேத் அலி கான் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை அவர் தெரிவித்திருக்கிறார்.

370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர், 5 காஷ்மீரி பண்டிட்கள், 16 பிற இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டதாக கடந்த வாரம் நித்யானந்த் ராய் கூறியிருந்தார். இந்தச் சூழலிலும், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை என அவர் கூறுவது ஏன் எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

2010-ல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் பண்டிட்களின் மீள்வருகை மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் 6,000 பேருக்கு காஷ்மீரில் அரசுப் பணிகள் ஒதுக்கப்பட்டன. பலர் மாவட்டங்களுக்கு இடையிலான பணியிட மாறுதலின் அடிப்படையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவருகிறார்கள். அந்த வகையில் 8,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகிறார்கள். எனினும், கடந்த சில மாதங்களாகப் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதால், அவர்களில் பலர் காஷ்மீரிலிருந்து வெளியேறினர்.

ராகுல் பட் படுகொலை

குறிப்பாக, 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், 2021 அக்டோபரிலிருந்து காஷ்மீரில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மே 12-ல், பட்காம் மாவட்டத்தில் பணிபுரிந்துவந்த அரசு ஊழியர் ராகுல் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் வசித்துவரும் பண்டிட்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது படுகொலைக்கு நீதி கேட்டு பண்டிட்கள் போராட்டம் நடத்தினர்.

எனினும், படுகொலைகள் தொடர்ந்தன. பள்ளி முதல்வர் சுபீந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த், ஆசிரியை ரஜ்னி பாலா, காவலர் அஜய் தார், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் எனப் பலர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர், காவலர்கள் போன்றோரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தனர் என்றாலும், வெளிமாநிலத்திலிருந்து வந்து பணிபுரிபவர்கள், காஷ்மீர் பண்டிட்கள் என காஷ்மீரின் சிறுபான்மைச் சமூகத்தினர்தான் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காகினர்.

காஷ்மீர் பண்டிட்களின் அசையா சொத்துகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுப்பதில் இருக்கும் பிரச்சினைகளைக் களைய கடந்த செப்டம்பரில் ஒரு சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, 610 காஷ்மீர் பண்டிட்களின் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் பிப்ரவரி 9-ல் மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இப்படி அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் இறங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. வெளிநபர்கள் காஷ்மீரில் நிலைபெறுவதை காஷ்மீர் மக்கள் இயல்பாகவே விரும்பாத நிலையில், அதைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் வெளிநபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மத்திய அரசின் பணிகள் உள்ளூர் காஷ்மீரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிலவும் அதிருப்தியையும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொண்டனர்.

படுகொலைகள் அதிகரித்ததால், காஷ்மீரில் பணிபுரியும் பண்டிட்கள் உள்ளிட்ட இந்துக்கள் ஜம்முவுக்குத் தங்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரத் தொடங்கினர். பீதியடைந்த காஷ்மீர் பண்டிட்கள் பலர் காஷ்மீரைவிட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறினர். குறிப்பாக ராகுல் பட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 2,000 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாக ஜம்முவில் உள்ள பாஜகவினரே கூறிய செய்திகள் வெளியாகின. கிடைத்த வாகனங்கள் மூலம் குல்காமிலிருந்து ஜம்முவுக்குச் செல்ல பல காஷ்மீர் பண்டிட்கள் முண்டியடித்தனர். அது தொடர்பான காணொலிகளும் வைரலாகின. அவர்கள் வெளியே செல்லவிடாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் அன்று வழக்கத்துக்கும் மாறாக ஏராளமான பயணிகள் குவிந்ததாகத் தகவல்கள் பரவின. எனினும் ஸ்ரீநகர் விமான நிலைய நிர்வாகம் அதை மறுத்தது.

காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி பல்வேறு தடைகளை அரசு நிர்வாகம் ஏற்படுத்தியிருந்ததாகவும், குடியிருப்புகளின் நுழைவாயில்கள் அடைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. காஷ்மீரிலிருந்து தங்களை இடமாற்றம் செய்யாவிட்டால் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் அடைக்கலம் கோரப்போவதாக சிலர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து, காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த மே மாதம், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வுசெய்தார்.

நித்யானந்த் ராய்
நித்யானந்த் ராய்

ஊடகங்களில் இதுதொடர்பாக விரிவான செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. எனினும், மாநிலங்களவையில் நேற்று பேசிய நித்யானந்த் ராய், காஷ்மீர் பண்டிட்கள் யாரும் தங்கள் அரசுப் பணியை ராஜினாமா செய்யவில்லை என்றே பதிவுசெய்திருக்கிறார்.

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றத்தின்போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. மத்தியில் வி.பி.சிங்கின் அரசுக்கு பாஜக ஆதரவு அளித்துவந்தது. எனினும், பண்டிட்கள் வெளியேற்றம் தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் கட்சிகள் மீதுதான் பாஜக குற்றம்சாட்டிவருகிறது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திலும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது, மத்தியில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து மீண்டும் வெளியேறுவது தங்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் எனும் அச்சமே அரசு இவ்விஷயத்தில் பிடிவாதம் காட்ட முக்கியக் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பாராட்டி விளம்பரம் செய்துகொண்டிருந்த பாஜகவினர் அதே காஷ்மீர் பண்டிட்களின் எதிர்ப்பை எதிர்கொண்டதும் கவனம் ஈர்த்தது.

இந்தச் சூழலில், மத்திய உள் துறை அமைச்சகம் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in