‘இந்தியை தேசிய மொழியாக்குவீர்களா?’ - கன்னடக் கல்வியாளர்களிடம் ராகுல் காந்தி சொன்ன பளிச் பதில்!

‘இந்தியை தேசிய மொழியாக்குவீர்களா?’ - கன்னடக் கல்வியாளர்களிடம் ராகுல் காந்தி சொன்ன பளிச் பதில்!

இந்தியை தேசிய மொழியாக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அளித்திருக்கும் பதில் வைரலாகியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில், தனது ‘இந்திய ஒற்றுமைப் பயண’த்தைத் தொடரும் ராகுல் காந்தி, நேற்று கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுடன் நடைபெற்ற உரையாடலில் கலந்துகொண்டார். அப்போது இந்தியை தேசிய மொழியாக்குவது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே, கன்னடத்தின் அடையாளம் குறித்து ராகுல் காந்தியுடன் கல்வியாளர்கள் உரையாடியதாகத் தெரிவித்தார்.

மேலும், “இந்தியை தேசிய மொழியாக்கும் எண்ணம் இருக்கிறதா என்று ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘ஒவ்வொரு தாய்மொழியும் முக்கியம். அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் இல்லை. உங்கள் மொழியின் (கன்னடத்தின்) அடையாளத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என்று உறுதியாகக் கூறினார்” என்று பிரியங்க் கார்கே கூறினார். தமிழகத்தைப் போலவே இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வு கொண்ட கர்நாடகத்தில் இந்தக் கருத்தை ராகுல் காந்தி பதிவுசெய்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இதுகுறித்த விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன.

இந்த உரையாடலில் கலந்துகொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில்லாதவர்கள் என்றும், அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது ராகுல் காந்தியிடம் பலர் கேள்வி எழுப்பியதாக காங்கிரஸ் கட்சியின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் ராஜீவ் கெளடா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in