பத்மநாபசுவாமி கோயிலுக்குத் தணிக்கையிலிருந்து விலக்கு கிடையாது; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

25 ஆண்டுகால வரவு - செலவு கணக்குகளை வெகுவிரைவில் தணிக்கை செய்ய உத்தரவு
பத்மநாபசுவாமி கோயிலுக்குத்
தணிக்கையிலிருந்து விலக்கு கிடையாது; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

கேரளத்தின் ஸ்ரீபத்மநாபசுவாமி ஆலயத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என்ற உத்தரவிலிருந்து விலக்கு தர முடியாது என்று. உச்ச நீதிமன்றம் இன்று (செப்.22) திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி ஆலயத்தின், 25 ஆண்டுகால வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பத்மநாபசுவாமி ஆலயம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளை இந்த ஆலயத்துடன் தொடர்புள்ளது என்பதால், அதன் வரவு – செலவு கணக்குகளைத் தணிக்கை செய்ய விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆலயத்தை நிர்வகிக்கும் நிர்வாகக் குழு கோரியிருந்தது.

“பெருந்தொற்று காரணமாகக் கேரளத்தின் அனைத்து ஆலயங்களும் பக்தர்கள் வர முடியாமல் பல மாதங்களுக்கு மூடப்பட்டன. இதனால் ஆலயங்களுக்கு நன்கொடைகளும் காணிக்கைகளும் குறைந்துவிட்டன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயத்துக்கு மாதம் ரூ.1.25 கோடி செலவாகிறது. ஆனால், வருவாயாக ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரைதான் கிடைக்கிறது. இதனால் ஆலயம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது” என்று நிர்வாகக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வசந்த் தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு “வரவு – செலவு கணக்குத் தணிக்கை ஆலயத்துக்கு மட்டுமல்ல, ஆலயத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கும் பொருந்தும். இந்த வழக்கு விசாரணையில் அரசுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர் (அமிகஸ் கூரே) அளித்த அறிக்கைகளின் பேரில்தான் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறியிருக்கிறது.

இந்தத் தணிக்கையை வெகு விரைவாக – முடிந்தால் இன்னும் 3 மாதங்களுக்குள் - முடிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in