300 கிலோ நகையுடன் எஸ்கேப்: 4 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் இல்லை: போலீஸாரிடம் கொந்தளித்த நகையை ஏமாந்த மக்கள்

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போராட்டம்
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போராட்டம்4 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் இல்லை: போலீஸாரிடம் கொந்தளித்த நகையை ஏமாந்த மக்கள்

முஸ்லிம் மக்களிடம் மோசடி செய்த ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மீதான வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நகையை மீட்டு தர வேண்டும் என 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கி வந்த ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் இஸ்லாமியர்களுக்கு வட்டி இல்லாமல் நகைக்கடன் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதனை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 300 கிலோ தங்கம் அடகு வைத்து பணத்தை பெற்றனர். பின்னர் 300 கிலோ நகையுடன் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் சையத் ஹிப்சார் மற்றும் அவரது மகன்கள் ரகுமான், அனிஷ் ஆகியோர் தலைமறைவானதால், கடந்த 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளாகியும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் பொருளாதார குற்றப்பிரிவினர் காலம் தாழ்த்துவதாகவும், இழந்த நகையை மீட்டு தரக்கோரியும் அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் அருகே பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராபியா, கடந்த நான்கு ஆண்டுகளாகியும் இவ்வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்துவதால், வழக்கு நீதிமன்றத்தில் தள்ளிப்போகிறது.

இவ்வளவு வருடங்களாகியும் தங்களது நகைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மீட்டு தரவில்லை. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்து ஜாலியாக சுற்றி திரிகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை அரசு நியமிக்க வேண்டுமென்றும் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நகையை மீட்டு தரவில்லையென்றால் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

பாதிக்கப்பட்டோர் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குற்றவாளிகளின் 7 சொத்துக்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in