
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்களை எச்சரிக்கும் வகையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 277.5 மி.மீ.க்கு பதில் 241.7 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
இது 18ம் தேதி காலை வடக்கு ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
16.11.2023 முதல் 21ம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2023 மற்றும் 16.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
இன்றைய தினம் வங்க கடல் பகுதிகளில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள் எனவே இன்றைய தினம் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!