
நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் இன்று தொடங்கின.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எஸ்சி நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிக்காக சுரங்கத்தை மேலும் விரிவு படுத்தும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன
இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் தடுப்பணைக் கட்டுவதற்கான பணி இன்று துவக்கப்பட்டது. இப்பணியை யாரும் தடுக்காத வகையில் கடலூர் எஸ்.பி ராஜாராம் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு அந்தந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
என்எல்சி நிர்வாகம் இயந்திரம் மூலம் பணிகளைத் தொடங்கியதை அறிந்த பாமகவினர் மேல் வளையமாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், கார்த்திகேயன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
இதேபோல சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வ மகேஷ், சண்முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களையும் வளையமாதேவி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் தலைமையில் சாலைமறியல் செய்ய முயன்ற விவசாயிகளையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தடுப்பணை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி கிராமங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.