என் எல் சி சுரங்க விரிவாக்கத்திற்காக தற்போது பணிகள் நடைபெற்று வரும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் 88 பேருக்கு தலா நாற்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக மேல் வளையமாதேவி பகுதியில் அந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களில் கால்வாய் தோண்டும் பணியை கடந்த மாதத்தில் துவங்கியது. அந்த நிலங்களில் விவசாயிகள் பயிர்கள் செய்திருந்ததால் என்எல்சியின் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயி முருகன் என்பவர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தற்போது பணிகள் நடைபெறுவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை செய்த பிறகு விவசாயிகள் நிலத்தை என்எல்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ₹25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும், அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
என்எல்சி தரப்பில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் 88 பேருக்கு தலா நாற்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.