நிதீஷ் தொடங்கிய சீர்திருத்த யாத்திரை: பங்கம் செய்யும் பாஜக!
பிஹார் முதல்வர் நிதீஷ் குமார்

நிதீஷ் தொடங்கிய சீர்திருத்த யாத்திரை: பங்கம் செய்யும் பாஜக!

சிறார் திருமணம், வரதட்சணைக் கொடுமை, மதுப்பழக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மேற்கொண்டுள்ள சமூக விழிப்புணர்வு யாத்திரையை (சமாஜ் சுதர் அபியான் யாத்ரா) எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. கிழக்கு சம்பராண் மாவட்டத்தில் டிசம்பர் 22-ல் இந்த யாத்திரை தொடங்கியது. ஜனவரி 15 வரையில் நடைபெறவுள்ளது.

இந்த யாத்திரையை, பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) விமர்சிப்பதில்கூட ஆச்சரியம் இல்லை. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உடனிருக்கும் பாரதிய ஜனதா தலைவர்களும் இன்னொரு தோழமைக் கட்சி இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) தலைவரான ஜித்தன்ராம் மாஞ்சியும் கூட, இது வெட்டி வேலை என்றே விமர்சிப்பதுதான் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சங்கடத்தில அழ்த்தியிருக்கிறது.

பெயரளவில் பாஜக அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பொது மேடைகளில் அமர்ந்துவிட்டு யாத்திரையில் பங்கேற்காமல் போய்விடுகிறார்கள். கேட்டால், இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஏற்பாடல்ல, ஐக்கிய ஜனதா தளத்தின் நிகழ்ச்சி என்கிறார்கள். இதில் உள்ள அம்சங்கள் சமூகங்களுக்கு நல்லதா இல்லையா என்று கூட கருத்து தெரிவிப்பதில்லை.

பிஹாரில் பூரண மதுவிலக்கை 2016-ல் அறிமுகப்படுத்தினார் நிதீஷ். அதனால் தாய்க்குலத்தின் ஆதரவு அவருக்கு நீடிக்கிறது. ஆனால் அது அமலானதிலிருந்து இன்றுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மது அருந்தியதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள். இதனால் அவர்களுடைய வெறுப்பைத்தான் சம்பாதிக்கிறோம் என்று பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமீபத்தில் மதுவுக்கு எதிராகப் பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமார், குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் வருகிறது என்று எச்சரித்தார். இதை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேலி செய்கிறார். மருத்துவ உலகுக்கே தெரியாத அரிய உண்மையெல்லாம் முதல்வருக்குத் தெரிகிறது என்று வாரினார். வெளியூர்க்காரர்கள் பிஹாருக்கு வந்து குடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சமஷ்டிப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நிதீஷ் அறிவித்தார். இது ஜனநாயகவாதியின் குரலாக இல்லை; மதுவிலக்கை அமல் செய்யும் எந்த மாநிலத்திலும் இப்படியெல்லாம் பேசுவதில்லை, நிதீஷ் ஏன்தான் இப்படி மாறிப்போனார் என்று அவருக்கு நெருக்கமானவர்களே வருத்தப்படுகிறார்கள். சிறார் திருமணம், வரதட்சணைக் கொடுமை பற்றி சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதியவர்கள் அப்படி எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். இவை காலம் கடந்த விஷயங்களாகிவிட்டன. இப்போது போய் ராஜா ராம் மோகன் ராய் போல சீர்திருத்த வேஷம் எதற்கு என்றும் பலர் கேட்கின்றனர்.

வரதட்சணைக் கொடுமை, சிறார் திருமணம் ஆகியவற்றை பிஹாரில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே சட்டம் போட்டும், பிரச்சாரம் செய்தும் தடுக்க முடியவில்லை. இதற்காக முதலமைச்சர் தன்னுடைய பிற கடமைகளை விட்டுவிட்டு ஊர் ஊராகப் போய் பொதுக்கூட்டத்தில் பேசுவதைவிட, பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் பாடமாகச் சேர்ப்பதே சிறந்தது என்று பலர் தெரிவிக்கின்றனர். அப்படி எழுதினால் திருந்திவிடுவார்களா என்றால், ஊர் ஊராகப் போய் பேசினாலும் திருந்திவிடுவார்களா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.

இந்தியாவில் எழுத்தறிவு அதிகரித்தாலும் சாதி, மத பூசல்களும் சச்சரவுகளும் குறையவில்லையே? படித்தவர்களே இதில் தீவிரமாக ஈடுபடுகிறார்களே? தீண்டாமையானது மிகவும் கொடுமை என்று சட்டமியற்றி தண்டனைகளை அறிவித்த பிறகும் தீண்டாமை இன்னமும் மறையவில்லையே? சாதிப் பெயரைச் சொல்லி திட்டக் கூடாது என்ற சட்டம் இருந்தாலும் வன்கொடுமை தடைச் சட்டப்படி புகார்கள் வருவதும் குறையவில்லை, அந்த வழக்குகளும் விரைவாக விசாரித்து தீர்ப்புகள் வருவதில்லை. எனவே பிஹார் முதல்வரின் சமூக சீர்திருத்த யாத்திரை பலன் தராது என்று தோழமைக் கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

பிஹாரை இப்போது வாட்டும் பிரச்சினைகள் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், மீண்டும் கெட ஆரம்பித்திருக்கும் சட்ட-ஒழுங்கு நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவை. முதல்வரும் மாநில நிர்வாகமும் இவற்றுக்கு முன்னுரிமை தந்து கவனிக்க வேண்டும், வரதட்சிணைக் கொடுமை, சிறார் திருமணம் போன்றவற்றை சமூக சேவை நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று தோழமைக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பூரண மதுவிலக்கு என்பது லட்சியத்துக்கு சரியாக இருக்கலாம், பொருளாதார வளர்ச்சிக்கோ, சமூக அமைதிக்கோ உதவப் போவதில்லை என்றே எல்லா தரப்பினரும் கருதுகின்றனர். குடிகாரக் கணவர்களால் பாதிக்கப்படும் பெண்களின் கண்ணீரை மதுவிலக்கு சட்டத்தால் மட்டுமே துடைத்துவிட முடியாது என்றே விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசு மதுபானத்தைத் தடை செய்தால், பக்கத்து மாநில எல்லைகளில் உள்ள ஊர்களுக்குச் சென்று குடிக்கிறார்கள் அல்லது அங்கிருந்து மறைத்து எடுத்துவருகிறார்கள். மதுபானத்துக்கு மாற்றாக உள்ளூரிலேயே ஏதாவது சரக்கைத் தயாரித்து குடிக்கிறார்கள். வார்னீஷ், பெயின்ட் போன்றவற்றைக் குடித்து உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள் அல்லது உயிரையே பலி கொடுக்கிறார்கள்.

மதுவிலக்கை அமல் செய்யும் மாநிலங்கள் இந்தியாவில் குஜராத்தும் பிஹாரும்தான். குஜராத்தில் இது பெயரளவுக்குத்தான் இருக்கிறது. ‘பர்மிட்’ வாங்கிக்கொண்டு குடிக்க அரசு அனுமதிக்கிறது. மதுபான விற்பனை வருமானம் மட்டுமல்லாமல் ‘பர்மிட்’ வருமானமும் உபரியாகக் கிடைக்கிறது. நட்சத்திர ஹோட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் குடிக்க மதுபானங்களுக்கு அனுமதி தரப்படுகிறது. பழங்குடிகள் பாரம்பரியமான மது வகைகளை மலர்களிலிருந்தும் மரப்பட்டைகளிலிருந்தும் பழங்களிலிருந்தும் தயாரித்துக் குடிக்கிறார்கள். பிஹாரில் மஹுவா இலையை, பழங்குடிகள் வீட்டில்கூட வைத்திருக்கக் கூடாது என்று நிதீஷ் குமார் கடுமையாக உத்தரவிட்டிருப்பதை பாஜக பெண் எம்எல்ஏவே சமீபத்தில் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தார்.

பிக்-பாக்கெட், திருட்டு, களவு போன்றவற்றுக்கு இணையாக மது அருந்துவதைக் கருதுவது தவறான செயல் என்றே உளவியலாளர்கள் கூறுகின்றனர். பூரண மதுவிலக்கை தேசியக் கொள்கையாக இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படைக் கடமையாக சேர்த்துவிட வேண்டும் என்று மேட்டுக்குடி உறுப்பினர்கள் சிலர் வாதிட்டபோது, அவை உறுப்பினர் ஒருவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் குடி நோயாளிகளுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லை, எனவே இதை அடிப்படைக் கடமையாக இடம் பெறச் செய்யாதீர்கள் என்று வாதிட்டார். அவர் சொன்னதில் உள்ள நியாயம் புரிந்துதான் இதைச் சேர்க்காமல் விட்டார்கள். ஆனாலும் குடிப்பழக்கம் என்பது தனி மனிதனுக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்துதான் என்பதை மறுக்க முடியாது.

கள் வேண்டுவோர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தென்னை, பனை, ஈச்சை மரங்களிலிருந்து எடுக்கப்படும் கள் என்பது சத்துள்ள பானம், பதநீரின் இன்னொரு வடிவம். இதை போதை தரும் பொருளாக நினைத்து தடுப்பது அறிவற்ற செயல் என்றே வாதிட்டார்கள். ஆனால் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபான வகைகளை விற்க அனுமதிக்கும் தமிழகம் உள்பட பல மாநிலங்கள், கள்ளை முற்றாகத் தடை செய்துள்ளன. ஆல்கஹால் கலந்து தயாரிக்கும் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீரை விட கெடுதலானவை அல்ல கள். இருந்தாலும் சாராயக் கடைகளின் வருவாய்க்கு போட்டியாக, கள் இருந்துவிடக் கூடாது என்று அதைத் தடுப்பதுடன் அந்த மரங்களையும் திட்டமிட்டு வெட்டி அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார்கள். பூரண மதுவிலக்குக்கு ஆதரவாளர்கள் போல, கள் விற்க அனுமதி வேண்டும் என்று நீங்களே கேட்கலாமா என்று கள் மரச் சாகுபடியாளர்களை ஏளனம் செய்து வாயை அடைத்துவிடுகிறார்கள்.

மதுபான விற்பனையை அரசே நடத்துவது தவறு, அரசு அதை முற்றாகத் தடை செய்து கள்ளச்சாராய வியாபாரத்துக்குத் துணை போவது அதைவிட தவறு. தமிழ்நாட்டில் மதுவிலக்கு பூரணமாக அமலில் இருந்து, ஒரு தலைமுறையே குடிவாசனை தெரியாமல் வளர்ந்தது. பிறகு படிப்படியாக மதுக் கடைகளைத் திறந்து லிட்டர் லிட்டர்களாக குடிக்க வைத்துவிட்டார்கள். இப்போதும் பூரண மதுவிலக்குதான் லட்சியம், கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறோம், மது விற்பனை நேரத்தைக் குறைத்துவிட்டோம் என்றெல்லாம் பசப்பி அதை நிரந்தரப்படுத்துகின்றனர். மதுவிலக்குப் பிரச்சாரம் என்கிற சம்பிரதாயம்கூட முடிவுக்கு வந்துவிட்டது.

ஆந்திரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் பாட்டில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் அரிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் சேர, மது அருந்தக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையை சமீபத்தில் நீக்கிவிட்டார்கள். இப்படி பல அரசியல் கட்சிகள் மது விஷயத்தில் முரணான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை. மது போதைக்கு அடிமையாகிவிடும் குடும்பத் தலைவர்களால் குடும்ப வருவாய் சரிந்து வீடுகள் நடுத்தெருவுக்கு வருவதும் பிள்ளைகளின் படிப்பு கெடுவதும் குடும்ப அமைதி, ஒழுக்கம் குலைவதும் கண்கூடு. ஆனால் நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் என்ன அறநெறிச் சாலைகளா? அவை பணம் சம்பாதிப்பதற்கான சமூக அமைப்புகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. எனவே நிர்வாண நகரத்தில் ஆடையணிந்த பித்தராக நிதீஷ் குமார் ஏளனம் செய்யப்படுகிறார்.

பிஹாரில் மதுபான உற்பத்தி, விநியோகம், விற்பனையை அனுமதியுங்கள். குடிப்பதற்கு ‘பர்மிட்’ முறையைக் கொண்டுவாருங்கள் குறிப்பிட்ட வயதுக்குக் கீழே உள்ளவர்கள் குடிக்கக் கூடாது என்று தடை விதியுங்கள், இரவு 10 மணிக்கு மேல் குடிக்கலாம் என்று அனுமதியுங்கள் என்று ஏகப்பட்ட யோசனைகள் கூறப்படுகின்றன.

பிஹாரில் உள்ள மதுவிலக்குக் கொள்கையால் அரசுக்கு கலால் தீர்வை வருமானம் குறைந்துவிட்டது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடித்ததற்காகத் தொடரப்படும் வழக்குகளால் சிறைக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய ஜாமீன் மனுக்களை விசாரிக்க நேரமில்லாமல் நீதிமன்றங்கள் திணறுகின்றன. மதுபானக் கடைகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வருகிறது. மதுபான ஆலைகள் வருவாய் இழந்துவிட்டன, அத்துறையில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுவிட்டது. மதுபான உற்பத்தி, வினியோகம், விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருவாய் ஈட்டிய ஆயிரக்கணக்கானவர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர் என்றெல்லாம் குடிக்கு ஆதரவாக பலரும் நிதீஷுடம் முறையிடுகின்றனர்.

பூரண மதுவிலக்கு என்பது புலி மீது சவாரி செய்வதைப் போன்றது என்பார்கள். நிதீஷ் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in