லாரி ஓட்டுநர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் : நிதின் கட்கரி

லாரி ஓட்டுநர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் : நிதின் கட்கரி

லாரி, பஸ்கள் போன்ற வணிக நோக்கமுள்ள கனரக வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநருக்குத் தூக்கக் கலக்கம் ஏற்பட்டால் அதை உணர்ந்து எச்சரிக்கும் கருவிகளைப் பொருத்த, கொள்கை வகுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார் தேசிய நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

தேசிய சாலை பாதுகாப்புப் பேரவை (என்ஆர்எஸ்சி) சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் கட்கரி பேசினார்.

“லாரி டிரைவர்கள் நீண்ட நேரம் பணியில் இருப்பதால் களைப்பு காரணமாக வாகனம் ஓட்டும்போது சில விநாடிகள் கட்டுப்படுத்த முடியாமல் கண்களை மூடிக்கொண்டே ஓட்டுகிறார்கள். பெரும்பாலான விபத்துகள் அதைப் போன்ற நேரங்களில்தான் நடக்கின்றன. இதனால் அதிக அளவிலான உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த உயிர்ப்பலிகளை நாம் கண்டிப்பாக நிறுத்தியே தீர வேண்டும். வாகனம் ஓட்டும்போது ஒட்டுநர்களுக்குக் களைப்பு ஏற்பட்டு கண்களை மூடினாலோ, ஸ்டீயரிங் வீலைப் பிடிப்பதில் தளர்ச்சி ஏற்பட்டாலோ, கியர், ஆக்சிலரேட்டர் ஆகியவற்றைக் கையாள்வதில் மாற்றம் தெரிந்தாலோ, எதிரே வரும் வாகனங்களின் விளக்கொளியில் கண் கூசினாலோ அதை உடனே உணர்ந்து எச்சரிக்கும் நவீனக் கருவிகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் அவற்றைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். அவற்றை இந்தியாவிலும் பொருத்துவதற்கான கொள்கையை உருவாக்குவது அவசியம்.

விமானங்களை ஓட்டும் பைலட்டுகள் குறிப்பிட்ட மணி நேரம்தான் விமானங்களை இயக்க வேண்டும் என்ற விதி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. லாரி ஓட்டுநர்களுக்கும் அப்படிப்பட்ட விதி அவசியம். சரக்கை ஏற்றிவிட்டு அதைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வரையில் இடைவிடாமல் ஓட்டுவதாலேயே பலருக்கும் களைப்பும் அசதியும் ஏற்படுகிறது.

2020-ல் நாட்டில் 90 லட்சம் லாரி ஓட்டுநர்களும் போக்குவரத்துப் பணியாளர்களும் சரக்குகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளனர். கேஸ்ட்ரால் நிறுவனம் 2018-ல் லாரி ஓட்டுநர்களிடம் ஆய்வு நடத்தியதில் 25 சதவீதம் பேர் தூக்க இழப்பால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். 53 சதவீதம் பேர் களைப்பு, சோர்வு, தூக்கமின்மை, தொப்பை, முதுகு வலி, கை – கால் மூட்டுகளில் வலி, கழுத்து வலி, பார்வைத் திறன் குறைவு, மூச்சிரைப்பு, மன அழுத்தம், தனிமை ஆகியவை தங்களை வாட்டுவதாகக் கூறியிருக்கின்றனர்.

லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களை ஓட்டுவோருக்கு நீண்ட நேர தொடர் உழைப்பால் ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சினைகளை அடையாளம் காணவும், அவற்றைத் தீர்க்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வழிகளைக் கண்டுபிடித்துள்ளது. ஓட்டுநர்கள் நிலையிலும், சாலைகளிலும் இதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஓட்டுநர்களிடம் கேள்வி கேட்டு, அதிலிருந்து அவர்கள் எந்தவிதமான பாதிப்பிலிருக்கின்றனர் என்று அறிந்து அவர்களை எச்சரிப்பது அல்லது தகுந்த ஆலோசனைகளை வழங்கி அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று நாம் செயல்பட வேண்டும்” என்றார் கட்கரி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in