திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் சீடர் பணிக்கு ஆள்சேர்க்கை தீவிரம்

திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் சீடர் பணிக்கு ஆள்சேர்க்கை தீவிரம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நித்யானந்தாவின் பெண் சீடர்கள், அவரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, தீபாராதனை செய்து வழிபட்டு வருகிறார்கள்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018-ம் ஆண்டு தலைமறைவான நித்யானந்தா, தனக்கென ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த இடத்திற்கு கைலாசா எனப் பெயரிட்டு, அங்கு வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து குருபூர்ணிமா அன்று நேரலையில் தோன்றிய நித்யானந்தா, வழக்கம் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் உற்சாகமாக உரையாற்றினார். இந்நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக அடைக்கலம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு நித்யானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா உள்ளிட்டோருக்கு ஆன்மிகப் பணிகளைப் பாராட்டி விருதுகளும் வழங்கி நித்யானந்தா பரபரப்பை ஏற்படுத்தினார்.

கார்த்திகை தீபத்திற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமி தரிசனத்திற்கு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தாவின் கைலாசா ஆசிரமத்தில் நித்யானந்தாவின் தத்ரூபமான முழு உருவச்சிலை உள்ளது. அந்த சிலைக்கு அவரின் பெண் சீடர்கள் மாலை அணிவித்து, அலங்காரம் செய்து, நெய்விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறார்கள். மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் நித்யானந்தாவின் தீட்சை பெறுவதற்காக இருக்கைகளும் அமைத்துள்ளனர். பக்தர்களின் தலையில் படிக லிங்கத்தை வைத்து அவர்களின் பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் என ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மனமுருக நித்யானந்தாவை வேண்டி அவர்கள் நெற்றியில் திருநீறு இட்டுச் சாந்தப்படுத்துகிறார்கள். மேலும் அவர்களின் முகவரி, தொடர்பு எண்களும் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். சீடராக பணியாற்ற விருப்பம் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என அவர்களின் தொடர்பு எண்களையும் கொடுக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in