கைலாசாவுக்கு அமெரிக்கா ‘அங்கீகாரம்’: பின்னணி என்ன?

கைலாசாவுக்கு அமெரிக்கா 
‘அங்கீகாரம்’: பின்னணி என்ன?

நித்தியானந்தா புதிதாக கட்டமைத்துள்ளதாக சொல்லப்படும் கைலாசா நாட்டை, இறையாண்மை தேசமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக நித்தி சீடர்கள் பெருமிதம் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் வழக்குகள் மற்றும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கும் உபாயமாக, நித்தியானந்தா நாட்டை விட்டே வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. பசிபிக் பெருங்கடலின் தீவு ஒன்றில் ’கைலாசா’ என்ற பெயரில் புதிய நாட்டினை நிர்மாணித்ததோடு, அதற்கென தனியாக கரன்சி முதல் வெளிநாடுகளுக்கான தூதர்கள் வரை நித்தி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்தபடி உலகம் முழுவதிலும் உள்ள தனது சீடர்களுக்கு அருளாசிகளை ஆன்லைன் வாயிலாகவே வழங்க ஆரம்பித்தார் நித்தியானந்தா. கரோனா காரணமாக சீர்குலைந்தவைகளின் பட்டியலில் கைலாசாவும் சேர்ந்தது. கைலாசாவின் கஜானாவை வழித்தெடுத்துக்கொண்டு சீடர்களில் சிலர் ஓட்டமெடுக்க, மெல்லக்கொல்லும் விஷம் தரப்பட்டதில் நித்தி செத்து மீண்டதாகவும் தகவல்கள் எழுந்தன. அவற்றை உறுதி செய்வதுபோல, உருக்குலைந்த நித்தியின் தோற்றமும் சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டும் பழைய வடிவுக்கு திரும்பியதும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே உறுதியானது.

ஆனால், ’கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ கதையாக, கைலாசா என்றொரு தீவு உள்ளதா, நித்தி சொல்வதில் எத்தனை சதவீதம் உண்மை என்ற சலசலப்பும் இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. இதனிடையே கரோனா காரணமாக படுத்த ஆன்மிக வணிகமும், நித்தியானந்தாவும் வீறுகொண்டு எழுந்தார்கள். ’திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..’ என்றபடி நித்தி முழுவீச்சில் அருளாசிகளையும், ஆன்மிக உபன்யாசங்களையும் ஆன்லைனில் அள்ளி வீசி வருகிறார்.

இதன் உச்ச களேபரமாக சிவன் வடிவில் அவர் அரங்கேற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள், பொதுவெளியின் சுவாரசியமான பொழுதுபோக்குகளில் சேர்ந்தது. இந்த வரிசையில் தடாலடி தகவல்களை அவ்வப்போது கைலாசாவிலிருந்து வெளியிட்ட வண்ணம் இருப்பார் நித்தி. அண்மையில் கூட பெங்களூரு பிடதி ஆசிரமம் முதல் கைலாசா தேசம் வரை, ஏராளமான பராமரிப்பு பணிகளுக்கான தொழிலாளர்கள் வேண்டும் என்றொரு அறிவிப்பு வெளியானது. பல கட்ட பரிசீலனைகளுக்குப் பின்னர் ஆளெடுப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொழிலாளர்கள் உட்பட கைலாசாவுக்கு சென்று திரும்பியவர்கள் குறித்த நம்பகத் தகவல் ஏதுமில்லை. ஆனால் கைலாசாவை முன்வைத்து பிரமாண்டமான திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது மட்டும் தெரிய வருகிறது. 2 தினங்கள் முன்னதாக அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் நகரமொன்றில், கைலாசாவுடனான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று நிறைவேறியதாக நித்தி சீடர்கள் பெரியளவில் பரப்பி வருகின்றனர்.

நியூஜெர்சியின் நெவார்க் நகர மேயர் ரஸ் ஜெ.பராக்கா மற்றும் கைலாசா பிரதிநிதி விஜய்ப்ரியா நித்தியானந்தா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்தி சீடர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தி சீடர்கள் பெருமிதம் கொண்டு வருக்கின்றனர்.

அமெரிக்கா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகாத சூழலில், நகர மேயர் ஒருவரோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றையே, ஐக்கிய அமெரிக்கா சார்பிலான அங்கீகாரமாக சொல்லி கைலாசாவுக்கு புதிய மைலேஜ் தந்திருக்கிறது நித்தி குரூப். இந்த ஒப்பந்தமும் ஆன்மிக பயிற்சி ஒன்று தொடர்பானது என்பது நித்தி சீடர்கள் பரப்பும் தகவலில் பொதிந்திருக்கிறது. ’கைலாசாவுக்கு அமெரிக்க அங்கீகாரம்’ என்று நித்தி பெயரில் வெளியான தகவலும், புகைப்படங்களும் சமூக ஊடகவெளியில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in