`எங்கள் மகன் இன்னும் இவர்கள் மூலம் வாழ்கிறான்'- உடல் உறுப்புக்களை தானம் செய்த ஏழைத் தம்பதி கண்ணீர்

கார்த்தி
கார்த்தி

விபத்தில் படுகாயம் அடைந்து, மூளைச் சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் அளித்ததன் மூலம் 9 பேருக்கு மறுவாழ்வு அளித்திருக்கின்றனர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைத் தம்பதியினர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர்களுடைய மகன் கார்த்தி ( 24). தாங்கள் கூலித் தொழிலாளிகளாக இருந்தாலும் தங்கள் மகனை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்ட இந்த தம்பதி, மகனை நன்கு படிக்க வைத்தனர். படித்து முடித்த கார்த்தி பெற்றோரின் விருப்பப்படி திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 20-ம் தேதி இரவு திருவள்ளூரில் இருந்து வந்தவாசி நோக்கி கார்த்தியும், அவரது நண்பர் செந்திலும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் அவர்களது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல் உதவி மற்றும் ஆரம்ப கட்ட சிகிச்சைகளுக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கார்த்தி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் பயனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தங்கள் மகன் நல்லபடியாக வாழ்ந்து அதன் மூலம் தங்களுக்கு பயன் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த தம்பதி மனம் உடைந்தனர்.

இதையடுத்து தங்கள் மகனால் வேறு பலருக்கு மறுவாழ்வு கிடைக்கட்டும் என்று கருதிய அவர்கள் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதையடுத்து கார்த்தியின் இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. அதன்மூலம் ஒன்பது பேர் பயன் பெற்றனர். பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் இருந்து சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடல் கிராம மக்களின் அஞ்சலிக்கு பிறகு நேற்று சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.

மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி அந்த தம்பதி தங்களை தேற்றிக் கொண்டாலும் அவர்களின் சோகத்தை போக்கிட சொல்வதற்கு தங்களிடம் வார்த்தைகள் இன்றி சொந்தங்கள் தவித்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in