இரவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் கிடந்த காவலாளி: காலையில் பதறிய பணிக்கு வந்த ஊழியர்கள்

பரமசிவம்
பரமசிவம்

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு  இரவு பணிக்கு வந்த காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமாக  இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கே. பரமசிவம் (65). இவர் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணிக்கு வந்த அவர்  இன்று  காலை அலுவலக வளாகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை காலையில் பணிக்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் கண்டனர்.  அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அதனையடுத்து உடனடியாக  காவல்  துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனிடையே அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பரமசிவத்தின் உறவினர்கள் ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர். 

கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸார் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in