கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்

புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றுப்பரவல் அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின்போது, அதை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டதாக கேரளத்தை பலரும் பாராட்டினார்கள். இத்தனைக்கும் இந்தியாவிலேயே முதல் கரோனா வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதும் கேரளத்தில்தான்! முந்தைய ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சர், கரோனா தொற்றை மிக சிறப்பாக எதிர்கொண்டார். இந்தமுறை, சைலஜா மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. சுகாதாரத் துறையில் இளையவரான வீணா ஜார்ஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது, இந்திய அளவில் அதிக அளவு கரோனா பாதித்த மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் கேரளம் உள்ளது. தினசரி கரோனா பாதிப்பு கேரளத்தில் இப்போது முப்பதாயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுக்கும்வகையில் கேரள அரசு சில புதிய கட்டுப்பாடுகளை இப்போது விதித்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

முன்னதாக, கரோனா தொற்றுப்பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துமாறு கேரள அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, இன்றுமுதல் இரவு 10 முதல் காலை 6 மணிவரை கேரளத்தில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும். கரோனா தொற்றுவிகிதம் 7 சதவிகிதம் வரை இருக்கும் உள்ளாட்சிப் பகுதிகளில் ட்ரிபிள் லாக்டவுண் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளிடம் போதிய தடுப்பூசி இருப்பு, மாவட்டத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பு என சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து கரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ள கேரள அரசு, நேற்று ஒரேநாளில் கரோனா வைரஸ் தொற்றால் 75 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து துணை நோய் இருப்பவர்களும், மூத்த குடிமக்களில் கரோனா கண்டறியப்பட்டவர்களும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற அறிவுறுத்தியுள்ளது. இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில், பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in