வாட்ஸ் ஆப் வாயிலாக வலை: ரூ.37 லட்சம் சுருட்டிய நைஜீரிய இளைஞர்

வாட்ஸ் ஆப் வாயிலாக வலை: ரூ.37 லட்சம் சுருட்டிய நைஜீரிய இளைஞர்

வாட்ஸ் ஆப் வாயிலாக பண மோசடிக்கான வலை விரித்து ரூ.37 லட்சம் பறித்த குற்றச்சாட்டின் கீழ், நைஜீரிய இளைஞர் ஒருவரை சைபர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செலஸ்டின் மகன் பனிமய கிளாட்வின் மனோஜ்(38). டோகோவில் இருப்பதாக சொல்லப்படும் வெட்டிஸ் என்ற மருந்து நிறுவனத்துக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சர்மா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திலிருந்து ஏற்றுமதி செய்யுமாறு கிளாட்வினுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக தகவல் வந்தது. இதனை நம்பி ரூ.36,98,800 ரூபாய் தொகையை ஆன்லைன் பரிமாற்றம் செய்ததில், பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாக கிளாட்வின் மனோஜ் புகார் அளித்தார்.

இவரது புகார் மனு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்  சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை கைது செய்து பணத்தை மீட்க உத்தரவானது.

சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷி பெடிலிஸ்(42) என்பவர் வாட்ஸ் ஆப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்ததும், போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. உடனே மும்பை விரைந்த தனிப்படை போலீசார், மும்பையின் உல்வே நோட் என்ற பகுதியில் வைத்து இஷி பெடிலிஸை கைது செய்தனர். பின்னர் அந்த நபரை சென்னை அழைத்து வந்துபுழல் சிறையில் அடைத்தனர்.

காவல்துறை விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த இஷி பெடிலிஸ் இதுபோல் பல நபர்களை ஏமாற்றி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in