நிலாவிலும் மூளும் அமெரிக்கா - சீனா மோதல்!

நிலாவிலும் மூளும் அமெரிக்கா - சீனா மோதல்!

நிலவின் பரப்பில் எல்லை பிரித்து ஆளுகைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த இரு நாடுகள் இடையே புவி பரப்பில் தொடரும் மோதல்கள் நிலவிலும் எதிரொலிப்பதை உலகின் இதர நாடுகள் கவலையோடு கவனிக்கின்றன.

நாசா தலைவரான பில் நெல்சன் இன்று சீனா மீது பாய்ந்திருப்பது இவ்வாறு கவனத்தை ஈர்த்திருக்கிறது. தென் சீனக் கடல் பரப்பில் செயற்கை தீவுகளை உருவாக்குவது உட்பட முறையற்ற வகையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொள்வதாக, அமெரிக்கா முழங்கி வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பால் சர்வதேச கடல் பரப்பும், அதன் வழியிலான சர்வதேச நாடுகளின் பயணமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அணு ஆயுத போர்க்கப்பல்களை தென் சீனக் கடலில் அவ்வப்போது அமெரிக்கா உலவச் செய்து அங்கு போர்ப் பதட்டத்தை கூட்டி வருகிறது.

இவ்வாறான தென் சீனக் கடலின் சீன ஆக்கிரமிப்பினை மேற்கோள் காட்டிய பில் நெல்சன், பூமிக்கு அப்பாலான நிலவில் மூளும் புதிய விவகாரம் குறித்தும் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நிலவின் வளங்கள் அதிகமுள்ள பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு தொடங்கியிருப்பதாகவும், அப்பகுதிகள் அமெரிக்காவின் ஆய்வுக்கு தடுக்க முயல்வதாகவும் பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அப்பால் விண்வெளியிலும், அங்குள்ள கோள்கள் மற்றும் துணைக்கோள்களிலும் உலக வல்லரசுகள் தங்களது ஆதிக்க போக்கை நிறுவ முயற்சித்து வருகின்றன. இந்த விண் ஆய்வுகளின் பின்னணியில், நிலவின் பரப்பில் புதைந்திருக்கும் வளங்களை சூறையாடுவதையும் மறைமுக நோக்கமாக கொண்டிருக்கின்றன. புவியின் அரிதான தனிமங்கள் அங்கே அதிகம் கிடைப்பதுடன், அவற்றால் பொருளாதார வளம் முதல் அணு ஆயுத உற்பத்தியின் அடுத்தக்கட்டம் வரை முன்னேற வல்லரசு தேசங்கள் முனைகின்றன.

இந்த நோக்கிலான அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் போக்கே தற்போது விண்வெளியிலும் அவற்றின் மோதலுக்கு அடித்தளமிட்டுள்ளன. டிசம்பர் மாதம் சீன அரசு மேற்கொண்ட முக்கியமான கொள்கை முடிவுகளில், மனிதர் வாழத் தகுதியான வகையில் நிலவில் நிரந்த குடியேற்றங்களை உருவாக்குவது மற்றும் வளங்களை அடைவது குறித்தும் விவாதிக்கப்பட்டிருந்தன.

இதனை சுட்டிக்காட்டும் அமெரிக்கா, நிலவில் நாசா மேற்கொண்டுவரும் ஆய்வுகளுக்கு சீனா குறுக்கே நிற்க, அதன் புதிய முடிவுகள் உதவும் என பதறுகிறது. நிலவை முன்வைத்து அமெரிக்க மற்றும் சீன நாடுகளின் மோதல் விண்வெளி வரை நீண்டிருப்பது, பூமியிலும் அவற்றின் சுமூகத்தை குறைத்து புதிய மோதல்களுக்கு வித்திடும் என்ற கவலையை உலக நாடுகளுக்கு சேர்ந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in